நகரங்கள் மற்றும் கிராமங்களில் சிறப்பான இடங்களை கண்டறிந்து, அங்கு சர்வதேச யோகா தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.
சர்வதேச யோகா தினம், ஜூன் 21ல் கொண்டாடப்படுகிறது. இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:-
இந்த எட்டாம் ஆண்டு சர்வதேச யோகா தினம் மனிதகுலத்துக்கான யோகா தினமாக கொண்டாடப்பட உள்ளது. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி இந்த தினத்தை மக்கள் உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும். யோகா வாயிலாக உடல், ஆன்மிகம் மற்றும் அறிவுசார் நல்வாழ்வு ஊக்கம் பெறுவதை மக்கள் அனுபப்பூர்வமாக உணர்ந்து வருகின்றனர்.
உலகின் தலைசிறந்த தொழிலதிபர்கள் முதல் திரைத்துறை மற்றும் விளையாட்டு வீரர்கள் வரை, மாணவர்கள் முதல் சாமானியர்கள் வரை அனைவரும் யோகாவை வாழ்வின் அங்கமாக மாற்றி வருகின்றனர். சுதந்திர தினத்தின் 75வது ஆண்டை கொண்டாடவுள்ள வேளையில், நாட்டின் 75 முக்கிய இடங்களில் யோகா தினத்துக்கான நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள சிறப்பான இடங்களை கண்டறிந்து மக்கள் கொண்டாட வேண்டும். இவ்வாறு பிரதமர் கூறினார்.