மேல்சபை எம்.பி. தேர்தல்: காங்கிரஸ், அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்!

மேல்சபை எம்.பி. தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ப.சிதம்பரம் நேற்று மாலை அறிவிக்கப்பட்டார்.

முன்னதாகவே மனு தாக்கலுக்கான ஏற்பாடுகளை செய்யும்படி கட்சி மேலிடம் அவரிடம் சொல்லி உள்ளது. எனவே ப.சிதம்பரம் அதற்கான பணிகளில் ஈடுபட்டார். சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கு.செல்வபெருந்தகை உள்பட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சந்தித்து அவர்களுக்கு பொன்னாடை போர்த்தினார். தனக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளித்த சோனியாவுக்கு எனது உளமார்ந்த நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

அதே போல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து உள்ளார். அதில், எங்களுக்கு ஆதரவு தருகின்ற தி.மு.க. அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தோழமை கட்சியினருக்கு என் இதயம் நிறைந்த நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்று பகல் 12 மணியளவில் தலைமை செயலகத்தில் சட்டசபை செயலாளரிடம் ப.சிதம்பரம் மனுதாக்கல் செய்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வேட்பாளர் பெயரை முன்மொழிந்து கையெழுத்து போட்டனர். மற்ற எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர். முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ப.சிதம்பரம் வாழ்த்து பெற்றார்.

இந்நிலையில் மேல்சபை எம்.பி. தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் தர்மர் ஆகியோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

மேல்சபை எம்.பி. தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். வேட்பாளர்கள் இருவரும் இன்று காலையில் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். காலை 10 மணியளவில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வந்தனர். தலைமைக்கழகத்தில் சிறிது நேரம் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். பின்னர் அனைவரும் கோட்டைக்கு புறப்பட்டு சென்றார்கள். அங்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் சி.வி.சண்முகமும், தர்மரும் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். நிகழ்ச்சியில் கட்சியின் மாநில நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் பலர் பங்கேற்றனர்.