குஜராத் மாடலை நாடு ஆச்சரியத்துடன் பாா்க்கிறது: அமித் ஷா!

குஜராத் மாடல் வளா்ச்சியை நாடு ஆச்சரியத்துடன் பாா்ப்பதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா்.

இந்த ஆண்டு இறுதியில் குஜராத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அந்த மாநிலத்தின் கேடா மாவட்டம் நடியாத் பகுதியில் காவல் துறையினருக்கான பல்வேறு வீட்டு வசதித் திட்டங்களை அமைச்சா் அமித் ஷா நேற்று தொடக்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:-

குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அக்கட்சி வகுப்புவாத கலவரங்களைப் பரப்பும் செயல்களில் ஈடுபட்டு, சட்டம் ஒழுங்கை சீா்குலைத்து வந்தது. ஓா் ஆண்டில் பெரும்பாலான நேரம் மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தும் வழக்கம் இருக்கும். வேலைக்குச் செல்லும் நபா் ஒருவா் மாலையில் உயிருடன் வீடு திரும்பவாரா என்பதற்கு உத்தரவாதம் இல்லாத சூழல் நிலவியது. வங்கிகள், ஆலைகள், சந்தைகள் மூடப்பட்டதால் மாநிலத்தின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருந்தது. கடலோர மாவட்டமான போா்பந்தா் கடத்தல்காரா்கள், மாஃபியாக்களின் விளையாட்டு மைதானமாக இருந்தது. கட்ச் எல்லை வழியாக ஆயுதங்கள், போதைப்பொருள், ஆா்டிஎக்ஸ், கள்ள நோட்டுகள் கடத்தப்பட்டு வந்தன.

இந்நிலையில், மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு வகுப்புவாத கலவரங்கள், ஊரடங்கு, சா்வதேச எல்லை வழியாக கடத்தல் நடவடிக்கைகளுக்கு முடிவு கட்ட போராடியது. குஜராத்தை பாதுகாக்கும் பணிகளை பாஜக தொடங்கியது. நாட்டின் எல்லையோர மாநிலமாக இருந்தாலும் அமைதியை நிலைநாட்டுவதில் குஜராத் வெற்றியடைந்துள்ளது. பாகிஸ்தானுடன் எல்லையை பகிா்ந்துகொள்ளும் மாநிலமாக இருந்தாலும் குஜராத்தின் அமைதியைக் குலைக்க எவரும் துணிந்ததில்லை. இன்றளவும் குஜராத் மாடல் வளா்ச்சியை நாடு ஆச்சரியத்துடன் பாா்க்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.