திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் முதல்-அமைச்சர் திடீர் ஆய்வு!

டெல்டா மாவட்டங்களுக்கு செல்லும் வழியில் நேற்று திருச்சிக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநகராட்சி மைய அலுவலகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

டெல்டா மாவட்டங்களுக்கு செல்லும் வழியில் நேற்று திருச்சிக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநகராட்சி மைய அலுவலகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அங்கு பொதுமக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றுக் கொண்டார்.

டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஆறுகள், வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை ஆய்வு செய்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக சென்னையில் இருந்து நேற்று காலை விமானம் மூலம் திருச்சி புறப்பட்டார். திருச்சி விமான நிலையத்துக்கு பகல் 12.15 மணியளவில் அவர் வந்து சேர்ந்தார். விமான நிலையத்தில் அவரை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எ.வ.வேலு, ரகுபதி, மெய்யநாதன், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.

பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், திருச்சி உறையூரில் உள்ள கழக வெளியீட்டு செயலாளர் திருச்சி செல்வேந்திரன் வீட்டிற்கு சென்றார். அங்கு உடல் நலக்குறைவால் வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வரும் அவரை சந்தித்து உடல்நலம் விசாரித்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வரும்போது, உறையூர் செல்லும் வழியில் பாதாள சாக்கடைதிட்டப்பணிகளை பார்வையிட்டார். மேலும் அங்கு குண்டும், குழியுமாக காட்சி அளித்த சாலைகளையும் செப்பனிட்டு சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். அங்கிருந்து அரசினர் சுற்றுலா மாளிகைக்கு செல்லும் வழியில் பாரதிதாசன் சாலையில் உள்ள மாநகராட்சி மைய அலுவலகத்திற்குள் யாரும் எதிர்பாராதவகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்த கார் திடீரென்று சென்றது. அங்கு மாநகராட்சி ஆணையாளர் அறைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். நேற்று காலை 10 மணிக்குதான் திருச்சி மாநகராட்சியின் 2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு ஆய்வு மேற்கொண்டது அதிகாரிகள், ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

அங்கு ஆணையாளர் அறையில் நாற்காலியில் அமர்ந்த மு.க.ஸ்டாலின், மாநகராட்சி ஆணையாளர் முஜிபுர் ரகுமான் மற்றும் அதிகாரிகளை அழைத்து பட்ஜெட் குறித்த விபரங்கள் மற்றும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் வருகை பதிவேடு உள்ளிட்ட இதர பதிவேடுகளையும் ஆய்வு செய்தார். அத்துடன் மாநகராட்சி மருத்துவமனைகள், சுகாதார மையங்களின் செயல்பாடுகள் குறித்தும், ஒருங்கிணைந்த புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணியின் நிலை மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். பொதுமக்களிடம் குறைகேட்பு இதையடுத்து பொதுமக்களை வரவழைத்து அவர்களிடம் குறைகளை கேட்டார். மாற்றுத்திறனாளி உள்ளிட்ட பலர் தாங்கள் எழுதி கொண்டு வந்த மனுக்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர். அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டதோடு, உடனடியாக அவை மீது நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் மாநகராட்சி பகுதியில் குடிநீர் இணைப்பு, கட்டிட அனுமதிகள், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள், சொத்துவரி பெயர் மாற்றம் உள்ளிட்ட பொதுமக்கள் சேவை பணிகளை தாமதமின்றி விரைந்து முடித்திடவும், குடிநீர் இணைப்பு பணிகள் மேற்கொள்ளும்போது தோண்டப்படும் சாலைகளை உடனடியாக சீர்செய்திட வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ்பொய்யாமொழி, மேயர் அன்பழகன் மற்றும் ஆணையாளர் முஜிபுர் ரகுமான் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர். இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் உள்ள அரசினர் சுற்றுலா மாளிகைக்கு சென்றார். அங்கு அவர் மதிய உணவருந்திவிட்டு, சிறிதுநேர ஓய்வுக்கு பின், மாலை 4.15 மணியளவில் காரில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு புறப்பட்டு சென்றார்.