நிதி வசூல் மோசடி: கார்த்திக் கோபிநாத்தை 15 நாள் சிறையிலடைக்க உத்தரவு!

பெரம்பலூர் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலின் பெயரில் ரூ.34 லட்சம் ரூபாய் வசூல் செய்து மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட பாஜக ஆதரவாளர் கார்த்திக் கோபிநாத்தை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க அம்பத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாஜக ஆதரவாளரான கார்த்திக் கோபிநாத் இளைய பாரதம் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இவர் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான திருக்கோவில் பெயரை பயன்படுத்தி இணையதளம் மூலம் 34 லட்சம் ரூபாய் வசூல் செய்து மோசடி செய்ததாக ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் நேற்று காலை கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் பழுதடைந்த சிலைகளை சீரமைத்து தருவதாகக் கூறி நிதி திரட்டி மோசடி செய்ததாக கோயில் செயல் அலுவலர் அரவிந்தன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை ஆவடி மிட்னமல்லியை சேர்ந்த யூடிபர் கார்த்திக் கோபிநாத் என்பவரை ஆவடி மத்திய குற்றவியல் போலீசார் கைது செய்தனர். அவரிடம் குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள், உதவி ஆணையர் கந்தக்குமார் ஆகியோர் சுமார் 6 மணி நேரம் ஆவடி காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர். அதன் முடிவில் கார்த்திக் கோபிநாத் மீது 420, 406 மற்றும் 66(d) IT Act தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், மோசடி, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட வழக்குகள் பதியப்பட்டன.

முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து அம்பத்தூர் விரைவு நீதிமன்றத்தில் கார்த்திக் கோபிநாத்தை போலீசார் ஆஜர்படுத்த இருப்பதாக தகவல் வெளியானது. உடனே கார்த்திக் கோபிநாத்தின் ஆதரவாளர்களான பாஜக மாநில துணை தலைவர் டால்பின் ஸ்ரீதர், பாஜக விளையாட்டு துறை மேம்பாட்டு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி, திருவள்ளூர் மாவட்ட தலைவர் அஸ்வீன் தலைமையில் ஏராளமானோர் ஆவடி காவல் ஆணையரகத்தில் குவிந்து கலைந்து சென்றனர். இதனை தொடர்ந்து அம்பத்தூர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கார்த்தி கோபிநாத்தை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். அங்கும் ஏராளமான பாஜகவினர் திரண்டிருந்தார். இதனை தொடர்ந்து வழக்கை விசாரித்த அம்பதூர் விரைவு நீதிமன்ற நீதிபதி கார்த்திக் கோபிநாத்தை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.