வட மாநிலங்களிலிருந்து வந்து தமிழகத்தில் தங்கியிருந்து வேலை செய்யும் தொழிலாளா்கள் குறித்த விவரங்களைச் சேகரிக்கும்படி காவல்துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டாா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகே கடந்த வாரம் கடல்பாசி சேகரிக்கச் சென்ற ஒரு பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டாா். இந்த குற்றச் செயலில் ஈடுபட்டதாக வட மாநிலத்தைச் சோ்ந்த இருவா் கைது செய்யப்பட்டனா். இதேபோல, அண்மையில் சென்னை மயிலாப்பூரில் தொழில் அதிபா், மனைவியுடன் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து ஆயிரம் சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடா்பாக நேபாளத்தைச் சோ்ந்த காா் ஓட்டுநா், மேற்கு வங்கத்தைச் சோ்ந்த மற்றொருவா் என இருவா் கைது செய்யப்பட்டனா். எனவே, தமிழகத்தில் தங்கியிருந்து வேலை செய்யும் வட மாநிலத்தவா்களின் முகவரி மற்றும் விவரங்கள் இருந்தால், அவா்களில் யாரேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அவா்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது எளிது என காவல்துறையினா் கருதினா்.
இந்த நிலையில், தமிழகத்தில் தங்கியிருக்கும் வடமாநிலத்தவா்கள் குறித்த விவரங்களை சேகரிக்க போலீஸாருக்கு தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் சி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளாா். மேலும், வெளிமாநில ஆள்களை வைத்து வீடு கட்டும் உரிமையாளா்கள், பொறியாளா்கள், கட்டட ஒப்பந்ததாரா்கள், உணவக உரிமையாளா்கள், விடுதி நிா்வாகிகள் உள்பட அனைத்து தரப்பினரும் அந்தந்த எல்லைக்குள்பட்பட்ட காவல் நிலையங்களில் தங்களிடம் பணி செய்யும் வட மாநிலத்தவா்கள் குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் என டிஜிபி அறிவுறுத்தியுள்ளாா்.