தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பாடல்களைப் பாடிய பிரபல பாடகர் கிருண்குமார் குன்னாத் திடீரென உயிரிழந்துள்ளார்.
இந்தியாவில் பல்வேறு மொழிகளிலும் ஹிட் கொடுத்த முக்கிய பாடகர்களில் ஒருவர் கிருண்குமார் குன்னாத்.
கேகே என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் இவர் மின்சார கனவு படத்தில் இடம் பெறும் ஸ்ட்ராபெரி கண்ணே பாடல் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளிலும் இவர் பாடல்களைப் பாடியுள்ளார். இவர் நேற்று (மே 31) கொல்கத்தாவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இருந்தார். இந்த கொல்கத்தா இசை நிகழ்ச்சி நடந்து முடிந்த சில மணி நேரங்களில் பாடகர் கேகே எதிர்பாராத விதமாக மரணம் அடைந்துள்ளார். அவரது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் இசை நிகழ்ச்சி தொடர்பான வீடியோ உள்ளது. அதில் அவர் நலமாகவே உள்ளார்.
53 வயதான பாடகர் கேகே கொல்கத்தாவின் நஸ்ருல் மஞ்சா ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிக்குப் பிறகு ஹோட்டலுக்கு திரும்பி உள்ளார். அறைக்குச் சென்று கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக மரைடைப்பு ஏற்பட்டதாகவும் அப்போது அவர் ஹோட்டல் படிக்கட்டுகளில் இருந்து அப்படியே கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அவருக்கு மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். பாடகர் கேகேவின் திடீர் மரணம் அவரது ரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
பாலிவுட் திரையில் அறிமுகமாகி இருந்தாலும் இவர் பல்வேறு ஹிட் தமிழ் பாடல்களையும் பாடி உள்ளார். 7ஜி ரெயின்போ காலனி (நினைத்து நினைத்து பார்த்தேன்), கில்லி (அப்படி போடு), ரெட் (ஒல்லிக்குச்சி உடம்புக்காரி), காக்க காக்க (உயிரின் உயிரே) உள்ளிட்ட பல பாடங்களில் ஹிட் பாடல்களை கேகே பாடி உள்ளார். இது மட்டுமின்றி கன்னடம், மலையாளம், பெங்காலி, குஜராத்தி மொழிகளிலும் இவர் பாடல்களைப் பாடி உள்ளார்.
இவரது திடீர் மரணம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இணையத்தில் கேகேவின மரணத்திற்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், RIPKK என்ற ஹேஷ்டேக்கில் அவரது ரசிகர்கள் கேகே குறித்துப் பதிவிட்டு வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா, கிரிக்கெட் வீரர் ஷேவாக் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும் பிரதமர் நரேந்திர மோடியும் பாடகர் கேகே மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “கேகே என்று அழைக்கப்படும் பிரபல பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்தின் அகால மறைவு வருத்தமளிக்கிறது. அனைத்து வயதினரையும் கவர்ந்த அவரது பாடல்கள் பலவிதமான உணர்ச்சிகளைப் பிரதிபலித்தன. அவரது பாடல்கள் மூலம் நாம் எப்போதும் அவரை நினைவில் கொள்வோம். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி” என்று பதிவிட்டுள்ளார்.