ஜம்மு-காஷ்மீரில் தொடரும் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு ராகுல் காந்தி கண்டனம்!

ஜம்மு-காஷ்மீரில் தொடரும் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பண்டிட் சமூகத்தைச் சோ்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவரை பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொன்றனா். இக்கொடூர சம்பவத்துக்கு அரசியல் தலைவா்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தன் டிவிட்டர் பக்கத்தில், “காஷ்மீரில் கடந்த 5 மாதங்களில் பாதுகாப்புப் படையினர் 15 பேர் வீரமரணம் அடைந்தனர். பொதுமக்கள் 18 பேர் கொல்லப்பட்டனர். நேற்றும் ஒரு ஆசிரியை படுகொலை செய்யப்பட்டார். காஷ்மீர் பண்டிட்கள் கடந்த 18 நாள்களாக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிற வேளையில் பாஜக 8 ஆண்டுகால ஆட்சியைக் கொண்டாடுவதில் தீவிரம் காட்டிவருகிறது. பிரதமரே, இது திரைப்படம் அல்ல. இன்றைய காஷ்மீரின் எதார்த்தம்” என தன் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.