முல்லைபெரியாறு அணையில் இருந்து தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு முதல்போக பாசனத்திற்காக இன்று முதல் 300 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மலர் தூவி வரவேற்பு.
முல்லைபெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை கொண்டு தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் இருபோக நெல்சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. முதல்போக சாகுபடிக்காக அணையில் இருந்து நீர் இருப்பை பொறுத்து வழக்கமாக ஜூன் 1-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு அணையின் நீர்மட்டம் 132 அடியை கடந்து இருப்பதாலும், தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கும் என்பதாலும் முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதனை ஏற்று இன்று முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி முல்லைபெரியாறு அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்காக விநாடிக்கு 200 கனஅடி வீதமும், தேனி மாவட்ட குடிநீருக்காக 100 கனஅடியும் சேர்த்து 300 கனஅடி திறக்க உத்தரவிட்டது. 120 நாட்களுக்கு நீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறந்துவிட அரசு அறிவுறுத்தியது.
அதன்படி இன்று முல்லைபெரியாறு அணை பகுதியில் பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு அருகில் உள்ள வனதுர்க்கை அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் அமைச்சர் இ.பெரியசாமி, கலெக்டர் முரளிதரன், எம்.எல்.ஏக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுப்பணித்துறையினர், விவசாய சங்கபிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அதன்பின் அணையின் ஷட்டர் அமைந்துள்ள பகுதிக்கு சென்று நீர்திறப்புக்கான பொத்தானை அழுத்தி அமைச்சர் இ.பெரியசாமி தண்ணீர் திறந்துவிட்டார். அப்போது ஷட்டர்கள் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது. அதில் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் மலர்தூவி வழிபட்டனர்.
இதேபோல் வைகை அணையின் நீர்மட்டம் கடந்த மே 23-ந்தேதி 66.93 அடியாக இருந்த நிலையில், கடந்த 9 நாட்களாக சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக கூடுதல் நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து 62 அடியை எட்டியது. மதுரை, தேனி, ஆண்டிபட்டி, சேடபட்டி குடிநீருக்காக 72 கனஅடி வீதம் வழக்கம்போல் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆற்றின் வழியாக நீர்திறப்பு நிறுத்தப்பட்டு மதுரை, திண்டுக்கல் மாவட்ட இருபோக பாசனத்திற்காக நாளை முதல் அணையில் இருந்து கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.