நடந்து முடிந்த ஐ.பி.எல்., போட்டியின் முடிவுகள் மோசடி செய்யப்பட்டதாக புலனாய்வு அமைப்புகளில் பரவலாக கருத்து உள்ளதாக ராஜ்யசபா எம்.பி.,யும் பா.ஜ., மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
15 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி, மே 29ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை குஜராத் டைட்டன்ஸ் அணி வென்றது. இந்த தொடரின் முடிவுகளில் மோசடி இருக்கலாம் என பாஜக சுப்பிரமணியன் சுவாமி ஒரு ட்விட்டர் பதிவை போட்டுள்ளார். இந்த தொடரின் முடிவுகள் வேண்டுமென்றே மாற்றப்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
டாடா ஐபிஎல் தொடரின் முடிவுகள் மோசடி செய்யப்பட்டதாக இருக்கலாம் என்ற எண்ணம் புலனாய்வு அமைப்பினரிடையே பரவலாக உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். அமித்ஷாவின் மகன் பிசிசிஐயின் அறிவிக்கப்படாத சர்வாதிகாரியாக இருப்பதால் அதை அரசு செய்யாது. எனவே பொது நல வழக்கை தொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளராக உள்ளார். சுப்பிரமணியன் சுவாமியின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.