வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட சாமி சிலைகள் தமிழக அரசிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டன.
தமிழக கோவில்களில் இருந்து கடந்த காலங்களில் திருடப்பட்ட சாமி சிலைகள் குறித்து குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவை சிலை தடுப்பு பிரிவினரால் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மாயமான சிலைகளை வெளிநாடுகளில் இருந்து மீட்பதற்கான முயற்சி போலீசாரால் எடுக்கப்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து சிலைகளை மீட்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதில் பல சிலைகள் வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களிலும், கலைப்பொருள் சேகரிப்பாளர்களிடமும் இருப்பது தெரியவந்தது. இந்த சிலைகள் தமிழக கோவில்களில் இருந்து திருடப்பட்டவை என்பதை நிரூபிக்க வேண்டிய சட்டப்படி செல்லத்தக்க சாட்சியங்கள் மற்றும் தடயங்களை சேகரித்து அந்த ஆதாரங்களை தமிழக அரசு மூலம் அந்த நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அந்த சிலைகள் தமிழக கோவில்களில் இருந்து திருடப்பட்டவை என்பதை சட்டப்படி நிரூபித்து சிலைகளை இந்தியாவிற்கு மீட்டு வர தமிழக சிலை திருட்டு மற்றும் தடுப்பு பிரிவு முயற்சி செய்து வந்தது. அதன் பயனாக கடந்த காலங்களில் தமிழக கோவில்களில் இருந்து திருடப்பட்ட விலைமதிப்பற்ற 10 புராதன உலோக மற்றும் கற்சிலைகள் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளின் அருங்காட்சியகங்களில் இருந்து மீட்கப்பட்டு அவை டெல்லியில் உள்ள இந்திய தொல்பொருள் துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்த சிலைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடந்தது. மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை மந்திரி கிஷன்ரெட்டி தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவிடம் சிலைகளை ஒப்படைத்தார். அப்போது மத்திய மந்திரி எல்.முருகன், காவல்துறை இயக்குநர் (சிலை திருட்டு தடுப்பு பிரிவு) ஜெயந்த் முரளி மற்றும் சிலை தடுப்பு பிரிவு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
தென்காசி, தஞ்சை கோவில் சிலை வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ள சிலைகளில் 2 துவாரபாலன் சிலைகள் தென்காசி மாவட்டம் அத்தானநல்லூர் மூன்றீஸ்வரமுடையார் கோவிலை சேர்ந்தவை. நடராஜர் சிலை தஞ்சை மாவட்டம் புன்னைநல்லூர் கைலாசநாதர் கோவிலையும், கங்காளமூர்த்தி, நரசிங்கநாதர் சிலைகள் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி நரசிங்கநாதர் கோவிலையும், விஷ்ணு, ஸ்ரீதேவி சிலைகள் அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி கிராமம் வரதராஜபெருமாள் கோவிலையும் சேர்ந்தவை. மேலும் மீட்கப்பட்ட சிவன்-பார்வதி சிலை தஞ்சை மாவட்டம் தீபாம்பாள்புரம் வான்மீகிநாதர் கோவிலையும், குழந்தை சம்பந்தர் சிலை நாகை மாவட்டம் சாயவனேஸ்வரர் கோவிலையும சேர்ந்தவை. நடனமாடும் குழந்தை சம்பந்தர் சிலை மட்டும் எந்த கோவிலை சேர்ந்தது என தெரியவில்லை. இந்த சிலைகள் தமிழகம் கொண்டு வரப்பட்டு கும்பகோணம் சிறப்பு கோர்ட்டில் ஒப்படைக்கப்படும். பின்னர் சம்பந்தப்பட்ட கோவில்களில் விரைவில் ஒப்படைக்கப்படும் என்று தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.