வடமாநிலங்களில் இருந்து வரும் மாணவர்களால் தமிழக கல்வி நிறுவனங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 21 என குறைந்த நிலையில் தற்போது மீண்டும் 100-ஐ நெருங்கியுள்ளது. சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளிலும் குழுக்குழுவாக தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்த நிலையில் இருந்தது. தற்போது அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களில் தொற்று பாதிப்பு கண்டறியப்படுவதால், தொற்று அதிகரித்துள்ளது. டெல்லி, அரியானா, உத்தரபிரதேசம், மராட்டியம், மத்திய பிரதேசம், கேரளா போன்ற மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. வடமாநிலங்களில் இருந்து வரும் மாணவர்களால், இங்குள்ள கல்வி நிறுவனங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிடக்கூடாது என்று சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ள மாணவர்களுக்கு லேசான அறிகுறி மட்டுமே உள்ளது. மாணவர்கள் அச்சமடைய தேவையில்லை. மாணவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அவர்களை வீடுகளில் இருக்க சொல்லவோ, கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவோ கூடாது. இந்த தொற்று பரவலை எளிதாக கட்டுப்படுத்திவிட முடியும். கல்வி நிறுவனங்களுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். தொற்று பாதித்த மாணவர்களின் மாதிரிகள், எந்த வகையான கொரோனா வைரஸ் என்பதை கண்டறிய பரிசோதனைக்காக மரபணு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இதுவரை எடுக்கப்பட்ட மாதிரிகளின் பரிசோதனை முடிவில் அனைவருக்கும் பி.ஏ.2 வகை கொரோனா வைரஸ்தான் உறுதியாகியுள்ளது. ஒருவருக்கு மட்டும் பி.ஏ.3 வகை கொரோனா வைரஸ் இருந்தது. அவரும் குணம் அடைந்துவிட்டார்.
ஒமைக்ரான் கொரோனா வைரசில் 7 வகையான தொற்று உள்ளது. லேசான தொற்று பாதிப்பாக இருந்தாலும், தொற்று வேகமாக பரவுகிறது. பொதுமக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது, முக கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது போன்ற விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். முதல் தவணை, 2-வது தவணை செலுத்திக்கொள்ளாத 1 கோடியே 45 லட்சம் பேர் விரைவாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். வருகிற 12-ந் தேதி தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் இந்த முகாம்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் வட மாநில மாணவர்களால் கொரோனா பரவியதாக, தமிழக அமைச்சர் கூறியது தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, உத்தரப்பிரதேச பா.ஜ., முக்கியத் தலைவரும், அம்மாநில அமைச்சருமான ஜிதின் பிரசாதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியியிட்ட செய்தியில், ‘கொரோனா நோய் தொற்றுக்கு எந்த மாநில எல்லைகளும் தெரியாது. வட இந்தியர்களை இழிவுபடுத்தும் வகையில், தமிழக அமைச்சரின் பொறுப்பற்ற மற்றும் இழிவான பேச்சு இது’ என, குறிப்பிட்டுள்ளார்.