முருகனுக்கு பரோல்: சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

மருத்துவக் காரணங்களுக்காக கணவர் முருகனுக்கு 6 நாட்கள் பரோல் வழங்கக் கோரி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் சுமார் 31 வருடங்களாக சிறையில் இருந்துவருகின்றனர். இதில், பேரறிவாளனை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட் விடுவித்தது. மீதமுள்ள 6 பேர் விடுதலை எப்போது என்ற கேள்விகள் எழுந்தபடியே உள்ளன. இந்த வழக்கில் ஆயுள் கைதியாக இருக்கும் நளினி, பரோலில் உள்ளார். நளினிக்கு இதுவரை 4 முறை பரோல் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. தற்போது மீண்டும் 5-வது முறையாக மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வகையில், பரோலில் மீண்டும் வெளிவந்துள்ளார் நளினி.

முருகன் பரோல் விடுப்பு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 1 ஆம் தேதி (நேற்று) மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும், 6ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் முருகன் விடுதலை தொடர்பாக மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் நளினி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்றைய தினம், தன்னுடைய கணவர் முருகனுக்கு பரோல் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார் நளினி.

அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது:-

ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தனக்கு தமிழக அரசு பரோல் வழங்கியதால் தாய் பத்மாவுடன் தங்கியிருக்கிறேன். ஆனால், வேலூர் சிறையில் இருக்கும் எனது கணவர் முருகனுக்கு பரோல் வழங்கப்படவில்லை. 31 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவிக்கும் எங்களை விடுதலை செய்வது தொடர்பான தமிழக அமைச்சரவை தீர்மானத்தின்படி இன்னும் எங்களை விடுதலை செய்யவில்லை.. மருத்துவக் காரணங்களுக்காக எனது கணவர் முருகனை 6 நாட்கள் பரோலில் செல்ல அனுமதிக்கக் கோரி கடந்த மே 26-ம் தேதி நானும், மே 21-ம் தேதி எனது தாய் பத்மாவும் தமிழக அரசிடம் மனு அளித்தோம். அந்த மனுக்கள் இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. அதனால் என்னுடைய கணவர் முருகன் 6 நாட்கள் பரோலில் செல்ல அனுமதிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று நளினி தனது மனுவில் கோரியிருந்தார்.

நேற்றைய தினம் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடக்க உள்ளது. இதில், மருத்துவ காரணங்களுக்காக முருகனுக்கு பரோலில் செல்ல அனுமதி கிடைக்குமா? இல்லையா? என்பது இன்று தெரிந்துவிடும்.