இலங்கைக்கு தப்பி செல்ல திட்டமிட்ட வாலிபர் உள்பட 2 பேர் கைது!

ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு தப்பி செல்ல திட்டமிட்ட வாலிபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இலங்கை வவுனியா அருகே உள்ள கல்நாட்டினார்குளம் பகுதியை சேர்ந்த வர்கீர்த்தனன். இவர் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 16-ந்தேதி விசா மூலம் சென்னைக்கு வந்துள்ளார். அவர் சென்னை வந்து 2 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் விசா காலாவதியாகி விட்டது. இதனால் இலங்கைக்கு விசா மூலம் செல்ல வாய்ப்பு இல்லை என்பதால், ராமேசுவரம் சென்று கடல் வழியாக ரகசிய பயணம் செய்ய கீர்த்தனன் திட்டமிட்டார்.
இதைத்தொடர்ந்து சென்னையில் இருந்து ரெயில் மூலம் ராமேசுவரம் வந்த அவர், படகு மூலம் இலங்கை செல்வதற்காக ஒரு ஏஜெண்டை தேடினார். அப்போது அவர் ராமேசுவரம் புது ரோடு சுனாமி காலனியை சேர்ந்த முத்துக்குமரன் என்பவரை நாடினார். அவரிடம் ரூ.30 ஆயிரம் கொடுத்து தன்னை படகு மூலம் இலங்கை பகுதியில் விட்டு விடும்படி கேட்டுக்கொண்டுள்ளார். அவரும் அதற்கு ஒப்புக்கொண்டு தேவையான ஏற்பாடுகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் ரகசியமாக விசாரணை நடத்தி கண்காணித்து வந்த அவர்கள், ராமேசுவரம் பகுதியில் வைத்து கீர்த்தனன் மற்றும் முத்துக்குமரனை பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கீர்த்தனன் இலங்கைக்கு சட்ட விரோதமாக தப்பி செல்ல இருந்ததும், அவருக்கு முத்துக்குமரன் உதவி செய்ததும் உறுதி செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

மேலும் கீர்த்தனிடம் இருந்து ரூ.10 ஆயிரம் ரொக்க பணம், காலாவதியான பாஸ்போர்ட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் 2 பேரையும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் முடிவு செய்து அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.