காஷ்மீரில் சிறுவன் சுட்டுக்கொலை!

காஷ்மீரில் வெளிமாநில தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 வயது சிறுவன் உயிரிழந்தான்.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்து, சீக்கிய மதத்தினரை குறிவைத்து கடந்த சில நாட்களாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. காஷ்மீரில் உள்ள வெளிமாநிலத்தவர்களை குறிவைத்தும் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், காஷ்மீரின் பட்கம் மாவட்டம் மஹ்ரய்புரா பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வெளிமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், அந்த செங்கள் சூளைக்குள் நேற்று இரவு 9 மணியளவில் துப்பாக்கியுடன் சென்ற பயங்கரவாதிகள் அங்கு வேலை செய்துகொண்டிருந்த வெளிமாநில தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் பீகாரை சேர்ந்த தில்குஷ் குமார் என்ற 17 வயது சிறுவன் உயிரிழந்தான். பஞ்சாப்பை சேர்ந்த ராஜன் என்ற மற்றொரு தொழிலாளி படுகாயமடைந்தார். இந்து மதத்தினரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் படுகாயமடைந்த தொழிலாளியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்ற பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர். முன்னதாக நேற்று காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் வங்கி மேலாளராக பணியாற்றி வந்த ராஜஸ்தானை சேர்ந்த இந்து மதத்தை சேர்ந்த விஜய் குமார் பயங்கரவாதியால் சுட்டுக்கொல்லப்பட்ட சில மணி நேரங்களில் மற்றொரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் காஷ்மீரில் இருக்கும் பண்டிட்கள் மீண்டும் ஜம்முவை நோக்கி இடம்பெற தொடங்கி உள்ளனர். அங்கு பண்டிட்கள் மீதும், வெளிமாநில மக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதாக கூறி, பண்டிட் பிரிவினர் காஷ்மீரை விட்டு வெளியேற தொடங்கி உள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் இருக்கும் பண்டிட்கள் உட்பட வெளிமாநில தொழிலாளர்கள் பலர் மீது கடந்த இரண்டு மாதமாக கொடூர தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. காஷ்மீரில் வெளிமாநில மக்கள் குடியேறி அங்கு பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. முக்கியமாக ஜம்முவில் இருந்து காஷ்மீரில் வந்து குடியேறிய பண்டிட்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பீகார், உத்தர பிரதேசத்தில் இருந்து வந்த பலர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். முக்கியமாக அங்கு பிரதமர் பேக்கேஜ் திட்டத்தின் கீழ் வேலை செய்யும் பண்டிட்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. பிரதமர் பேக்கேஜ் திட்டத்தின் கீழ் காஷ்மீரில் பண்டிட்களுக்கு அரசு பணிகள் வழங்கப்பட்டு உள்ளன. பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியின் கீழ் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி காஷ்மீரில் மீண்டும் பண்டிட்களை குடி அமர்த்தவும், அவர்களுக்கு அரசு வேலை வழங்கவும் முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி பண்டிட்களுக்கு 6000 அரசு வேலை உருவாக்கப்பட்டு அதில் 5,928 பணிகள் உடனடியாக நிரப்பப்பட்டது. அவர்கள் காஷ்மீரில் தங்கள் வீடுகளை புனரமைக்க 1.75 லட்சம் ரூபாயும் மன்மோகன் சிங் அரசு மூலம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த அரசு பணிகளில் உள்ள காஷ்மீரி பண்டிட்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் மூலம் இந்த தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த நிலையில் காஷ்மீரி பண்டிட் பிரிவை சேர்ந்த ராகுல் பாட் என்ற தாசில்தார் கொலை செய்யப்பட்டதில் இருந்து, காஷ்மீரில் பண்டிட்கள் போராட்டம் செய்து வருகின்றனர். தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று போராடி வருகின்றனர். எங்களை பாதுகாப்பான குடியிருப்புகளுக்கு கொண்டு செல்லுங்கள், நாங்கள் வேலை பார்க்கும் அலுவலகங்களில் கூடுதல் பாதுகாப்பு போடுங்கள். எங்களுக்கு பாதுகாப்பு இல்லை. போக்குவரத்து வசதி இருக்கும் இடங்களுக்கு அருகே எங்களை குடி அமர்த்துங்கள் என்று கூறி போராட்டம் செய்து வருகின்றனர். இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்ரீநகர் – ஜம்மு சாலையை இவர்கள் மறைத்து போராட்டம் செய்தனர். மெழுகுவர்த்தி ஏற்றி இவர்கள் அங்கு நீண்ட நேரம் போராட்டம் செய்தனர். அரசு எங்களுக்கு பாதுகாப்பு வழங்கவில்லை என்று கூறி நேற்றும் கூட அங்கு அரசுக்கு எதிராக காஷ்மீரி பண்டிட்கள் போராட்டம் செய்தனர்.

நாங்கள் இங்கே 15 வருடமாக வேலை செய்கிறோம். எப்போது இவ்வளவு பாதுகாப்பின்றி உணர்ந்தது இல்லை. இப்போது உணர்கிறோம். எங்களால் தொடர்ந்து காஷ்மீரில் வேலை செய்ய முடியாது என்று போராட்டம் செய்யும் பண்டிட்கள் கூறியுள்ளனர். இதை காரணமாக வைத்து காஷ்மீரில் இருந்து பண்டிட்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகிறார்கள். பல குடும்பங்கள் ஜம்முவை நோக்கி சென்றுள்ளனர். அங்கு காவல் அதிகாரிகள் காஷ்மீர் பண்டிட்களை வெளியேற அனுமதிப்பது இல்லை. இருந்தாலும் அவர்களுக்கு தெரியாமல் இரவோடு இரவாக காஷ்மீரி பண்டிட்கள் வெளியேறி வருகின்றனர். 30 குடும்பங்களுக்கும் மேல் அங்கிருந்து வெளியேறிவிட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் பல குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறும் வாய்ப்புகளும் உள்ளன. காஷ்மீரி பண்டிட்கள் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டால் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று பிரதமர் மோடி பல இடங்களில் குறிப்பிட்டார். ஆனால் தொடர்ந்து பண்டிட்கள் அங்கிருந்து வெளியேறுவது மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.