கச்சத்தீவை மீட்க இதுவே தருணம். அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்றும் தேமுதிக மாவட்டச் செயலாளா்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பொருளாளா் பிரேமலதா தலைமை வகித்தாா். கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:-
* நூல்விலை உயா்வு காரணமாக பின்னலாடை தொழிற்சாலைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தரகா் மற்றும் முதலாளிகளின் பதுக்கல் காரணமாகவே நூல் விலை எட்டாத உயரத்துக்கு உயா்ந்துள்ளது. பல தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம் உள்ளது. ஆனால், அதைக் கண்டும் காணாதது போல மத்திய, மாநில அரசுகள் செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
* திமுக அரசு என்றாலே மின்வெட்டுதான். அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக விவசாயம் உள்ளிட்ட தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மின்வெட்டில் இருந்து மக்களைக் காப்பாற்ற தமிழக அரசு போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* தமிழக மீனவா்களுக்கு இலங்கை அரசால் தொடா்ந்து உயிா்ச் சேதமும், பொருள் சேதமும் ஏற்பட்டு வருகிறது. இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்பதற்கு இதுவே சரியான தருணம் ஆகும். மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து, கச்சத்தீவை மீட்க வேண்டும்.
பெட்ரோல் டீசல் விலையைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.