அ.தி.மு.க.வுக்கு வி.பி.துரைசாமி சான்றிதழ் அளிக்க தேவை இல்லை: எடப்பாடி பழனிசாமி

வி.பி.துரைசாமி அ.தி.மு.க.வுக்கு சான்றிதழ் அளிக்க தேவை இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினைகள் குறித்து அ.தி.மு.க.வை விட, பா.ஜ.க.தான் அதிகம் பேசுவதாக பா.ஜ.க. துணைத்தலைவர் வி.பி.துரைசாமி கூறியிருந்தார். இதை அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மறுத்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், இது தொடர்பாக கூறியதாவது:-

மாநிலங்களவை தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த 2 பேர் வெற்றிக்கு துணை நின்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கும், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கும், பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கும், தமிழக தலைவர் அண்ணாமலைக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

நாட்டு மக்களின் பிரச்சினைகளை புள்ளி விவரத்தோடு சட்டமன்றத்தில் நானும், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் எடுத்து கூறுகிறோம் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். அதே போன்று சட்டமன்ற பா.ஜ.க. தலைவர் எவ்வாறு பேசுகிறார்? என்பதும் நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே வி.பி.துரைசாமி (தமிழக பா.ஜ.க. துணைத்தலைவர்) அ.தி.மு.க.வுக்கு சான்றிதழ் அளிக்க தேவை இல்லை. அவர் எந்த கட்சியில் இருந்து எந்த கட்சிக்கு சென்றிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் எங்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

நான் 1974-ம் ஆண்டு அ.தி.மு.க.வில் இணைந்தேன். 48 ஆண்டு காலமாக ஒரே இயக்கத்தில் இருந்து கொண்டிருக்கிறேன். அதே போன்று அ.தி.மு.க. நிர்வாகிகள் அனைவரும் கட்சிக்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம். அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அசைத்து பார்க்க முடியாது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த இந்த ஓராண்டு காலத்தில் மட்டும் தமிழகத்தில் ஏராளமான கொலைகள், திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளன. இதை தட்டிக்கேட்க அருகதை இல்லாத, திறமை இல்லாத அரசாகத்தான் தி.மு.க. அரசை நாங்கள் பார்க்கிறோம். பொதுமக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு கூட்டு பாலியல் வன்கொடுமை, சிறுமிகளுக்கு பாலியல் தொல்லைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. போலீஸ் துறையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முறையாக கவனிக்காததால் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து சந்தி சிரிக்கும் அளவுக்கு இருக்கிறது.

ஜெயலலிதா இருந்தபோதும், அவரது மறைவுக்கு பின்னரும் சட்டத்தின் ஆட்சி தமிழ்நாட்டில் நடந்தது. அன்றைக்கு யார் குற்றம் செய்தாலும் கடுமையாக நடவடிக்கை எடுத்தோம். இன்றைக்கு தி.மு.க.வை சேர்ந்தவர்கள் ஆங்காங்கே போலீஸ் நிலையங்களில் தலையிட்டு குற்றவாளிகளை காப்பாற்றுகிறார்கள். இதனால்தான் குற்றங்கள் குறையவில்லை. போலீசாரின் கைகள் கட்டப்பட்டுள்ளன. போலீசாரால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. கிராமம் முதல் நகரம் வரையில் எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் கஞ்சா விற்பனை செய்கிறவர்களுக்கு துணையாக இருக்கிறார்களா? என்ற சந்தேகம் எழுகிறது.

மு.க.ஸ்டாலின் நேரடியாக தனது மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுத்துவிட்டால் விமர்சனமாகி விடும் என்று நினைத்து இன்றைக்கு கொல்லைப்புறம் வழியாக அவரை அமைச்சராக்க பார்க்கிறார். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்று தீர்மானங்கள் போடுகிறார்கள். இந்த தீர்மானத்துக்கு அவசியமே இல்லை. மு.க.ஸ்டாலின் நினைத்தால் கொடுத்துவிட்டு போகட்டும், இதில் என்ன இருக்கிறது?. எல்லோரும் தீர்மானங்கள் போட்டதால் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுக்க போகிறேன் என்று அவர் சொல்ல போகிறார். இவ்வாறு அவர் கூறினார்.