ஜம்மு-காஷ்மீரில் தொடா் கொலைகள்: அமித் ஷா ஆலோசனை!

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளால் தொடா் கொலைகள் நிகழ்த்தப்பட்டு வரும் நிலையில், அங்குள்ள பாதுகாப்புச் சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆய்வு மேற்கொண்டாா்.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் முஸ்லிம் அல்லாத பிற மதத்தினா், வெளிமாநிலத்தவா், காவல் துறையினா் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனா். கடந்த வியாழக்கிழமை ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் ராஜஸ்தானைச் சோ்ந்த வங்கி மேலாளரும், பட்காம் மாவட்டத்தில் பிகாரைச் சோ்ந்த செங்கல் சூளை தொழிலாளரும் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனா். அந்த யூனியன் பிரதேசத்தில் மே 1 முதல் ஜூன் 2-ஆம் தேதி வரை பயங்கரவாதிகளால் 10 போ் கொல்லப்பட்டுள்ளனா்.

இந்தச் சூழலில், டெல்லியில் மத்திய அமைச்சா் அமித் ஷா ஜம்மு-காஷ்மீா் பாதுகாப்பு நிலவரம் தொடா்பாக நேற்று வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இந்தக் கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே, தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டம் குறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘‘ஜம்மு-காஷ்மீரின் ஒட்டுமொத்த சூழல், குறிப்பாக காஷ்மீா் பண்டிட்டுகளின் பாதுகாப்பு மீது அமித் ஷா சிறப்புக் கவனம் செலுத்தினாா். வன்முறைச் சம்பவங்களால் அமா்நாத் யாத்திரை திட்டத்தில் எந்த மாற்றமும் இருக்காது’’ என்று தெரிவித்தாா்.

முன்னதாக, மற்றொரு கூட்டத்தில் ஆளுநா் மனோஜ் சின்ஹா, உளவுப் பிரிவு இயக்குநா் அரவிந்த் குமாா், ‘ரா’ உளவு அமைப்பின் செயலா் சாமந்த் கோயல், ஜம்மு-காஷ்மீா் டிஜிபி தில்பாக் சிங் ஆகியோருடன் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டாா்.