தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தும்படி, தமிழக அரசுக்கு, மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷன் அறிவுறுத்தி உள்ளார்.
தமிழக மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ராதாகிருஷ்ணனுக்கு, அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:-
மத்திய, மாநில அரசுகள் முன்னெடுத்த தொடர் நடவடிக்கைகளால், மூன்று மாதங்களாக நாடு முழுதும் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது. திடீரென ஒரு வாரமாக தொற்று எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கடந்த வாரத்தில் 0.53 சதவீதமாக இருந்த நோய் பரவல் விகிதம், 0.73 சதவீதமாக அதிகரித்துள்ளது. சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் தீவிரமாக பரவி வருவதே இதற்கு காரணம். நாட்டின் மொத்த பாதிப்பில், 3.13 சதவீதம் தமிழகத்தில் இருந்து பதிவாகியுள்ளது. நோய் தடுப்பு விதிகளை முறையாக கடைப்பிடித்தல், தடுப்பூசி செலுத்துதல், சிகிச்சை வசதிகளை ஆயத்தமாக்குதல், பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துதல் என, பல்வேறு நிலைகளில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கையாள வேண்டியது கட்டாயம். தமிழக அரசு கொரோனா விவகாரத்தில், தீவிர கண்காணிப்பையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.