காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி சுட்டுக்கொல்லப்பட்டான்.
ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிரித்து வருகிறது. குறிப்பாக, இந்து மதத்தினர் மற்றும் வெளிமாநிலத்தவர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து பயங்கரவாத தேடுதல் வேட்டையை பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் ரிஷிபுரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக நேற்று மாலை பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனை தொடர்ந்து, அப்பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பிற்கு இடையே பல மணி நேரம் துப்பாக்கிச்சூடு நீடித்தது. இதில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். கொல்லப்பட்ட பயங்கரவாதி ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி நிசர் கான்டெ என்பது தெரிய வந்துள்ளது. பயங்கரவாதியிடமிருந்து துப்பாக்கி, வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
என்கவுண்டர் நடந்த பகுதியில் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதால் துப்பாக்கிச்சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த என்கவுண்டரின் போது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு படையினர் 3 பேர், பொதுமக்களில் ஒருவர் என மொத்தம் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த 4 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.