ஈரோடில் சிறுமியின் கருமுட்டை விற்கப்பட்ட விவகாரத்தில், மேலும் ஒருவரை, போலீசார் கைது செய்தனர்.
ஈரோடில், 16 வயது மகளை வளர்த்து வந்த தாய், கணவனை பிரிந்து, அதே பகுதியில் பெயின்டராக வேலை செய்தவருடன் வசித்தார். ஈரோடு உட்பட பல பகுதியில் அப்பெண்ணின் மகளை பெயின்டர் கர்ப்பமாக்கி, கருமுட்டை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தனர். இதற்காக சிறுமியின் ஆதார் அட்டையை திருத்தம் செய்து, ஈரோடில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருமுட்டை விற்பனை செய்தபோது, புகாரில் சிக்கினர்.
இது தொடர்பாக, ஈரோடு எஸ்.பி., அலுவலகம், நேற்றிரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: –
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், தனது கணவரை விட்டு பிரிந்து வந்து ஈரோட்டில் பெயிண்டராக பணியாற்றி வரும் நபருடன் சோ்ந்து வாழ்ந்து வந்துள்ளாா். சிறுமியின் தாய் கடந்த பல ஆண்டுகளாக ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கருமுட்டை கொடுத்து பணம் பெற்று வருவதை வாடிக்கையாக கொண்டிருந்துள்ளாா்.
இந்நிலையில் தனது மகள் 12 வயதில் பூப்படைந்ததும், கருமுட்டை தொழிலில் ஈடுபடுத்துவதற்கு தயாா்படுத்தும் வகையில், சிறுமியிடம் வளா்ப்புத் தந்தை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். சிறுமிக்கு கருமுட்டை உருவான பிறகு மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருமுட்டை கொடுத்து ஒவ்வொரு முறையும் ரூ.20,000 பணம் வாங்கி வந்துள்ளனா். இதற்கு இடைத்தரகராக மாலதி (36) என்ற பெண் இருந்து வந்துள்ளாா். சிறுமியின் உண்மையான வயதை மறைக்கும் வகையில் போலியாக ஆதாா் அட்டை தயாரித்து அதில் சிறுமியின் வயது 20 என்றும், பெயரையும் மாற்றி மருத்துவமனையில் கொடுத்துள்ளனா். மாலதி கமிஷனாக ரூ.5,000 பணம் வாங்கி வந்துள்ளாா். இதுவரை சிறுமியிடம் 8 முறை கருமுட்டை பெற்றுள்ளனா். கருமுட்டை கொடுப்பதை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவோம் என்றும் தாய் மற்றும் வளா்ப்புத் தந்தை இருவரும் மிரட்டி வந்ததால் வெளியில் சொல்லாமல் இருந்து வந்துள்ளாா்.
இந்நிலையில் கடந்த மாதம் 20ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி நடந்த கொடுமைகளை தனது சித்தி, சித்தப்பா ஆகியோரிடம் கூறியதையடுத்து காவல்துறை கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து விசாரணை நடத்தி தாய், வளா்ப்புத் தந்தை மற்றும் தரகா் என 3 போ் மீதும் போக்ஸோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளோம். இதில் பாரதிபுரம் அந்தோணி மகன் ஜான், 25, நேற்று கைது செய்யப்பட்டார். இதனால் கைது எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது என்றனா்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு தனியார் மருத்துவமனைகள் காவல்துறை கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல், மாநிலம் முழுவதும் உள்ள மகப்பேறு மருத்துவமனைகளில் இதுபோன்று சட்டவிரோதமாக கருமுட்டை பெறும் நடவடிக்கைகள் நடைபெறுகிறதா என்பது குறித்தும் ஆய்வு நடத்த சுகாதாரத் துறை முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.