ஓட்டல் உணவு மீது சேவை கட்டணம் வசூலிக்கக்கூடாது: பியூஸ் கோயல்

ஓட்டல் உணவு மீது சேவை கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று மத்திய மந்திரி பியூஸ் கோயல் உத்தரவிட்டுள்ளார்.

ஓட்டல்களில் உணவு கட்டணம் மீது சேவை கட்டணம் வசூலிக்கக்கூடாது என்றும், விரைவில் சட்டரீதியாக உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் மத்திய நுகர்வோர் விவகாரத்துறை நேற்று முன்தினம் கூறியிருந்தது. இந்தநிலையில், நேற்று மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை மந்திரி பியூஸ் கோயலிடம் இதுபற்றி நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:-

ஓட்டல்கள், வாடிக்கையாளர்கள் சாப்பிட்டதற்கான உணவு தொகையில் சேவை கட்டணத்தை சேர்க்கக்கூடாது. தங்கள் ஊழியர்களுக்கு அதிக சம்பளம் தர விரும்பினால், உணவு பொருட்களின் விலையை உயர்த்திக்கொள்ளலாம். ஏனென்றால், நாட்டில் விலை கட்டுப்பாடு கிடையாது. அதை விட்டுவிட்டு, சேவை கட்டணம் என்ற பெயரில், வாடிக்கையாளர்களின் தலையில் அந்த சுமையை சுமத்தக்கூடாது. ஊழியர்களின் சேவையில் திருப்தி ஏற்பட்டால், வாடிக்கையாளர்கள் தாங்களே முன்வந்து ‘டிப்ஸ்’ தருவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.