இந்தியாவில் மக்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதற்கு இந்தியா சார்பில் பதிலடி தரப்பட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் டோனி பிளிங்கன், சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆண்டறிக்கையை வெளியிட்டு பேசியதாவது:-
உலகளவில் மத சுதந்திரத்திற்கு அமெரிக்கா தொடர்ந்து துணை நிற்கும். இதற்காக சர்வதேச நாடுகள், நிறுவனங்கள், சிவில் அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுவோம். அடுத்த மாதம் பிரிட்டன் அமைச்சரவை கூட்டத்திலும் இது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. அனைத்து மக்களும் அவரவர் மத வழிபாடுகளை சுதந்திரமாக கடைபிடிக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பம். உதாரணமாக, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக இந்தியா விளங்குகிறது. அங்கு, பல மதத்தினர் வசிக்கின்றனர். எனினும் அங்கு சிலர் மீதும், வழிபாட்டுதலங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்தியாவில் 2021-ஆம் ஆண்டு முழுவதும் சிறுபான்மை சமூக உறுப்பினா்கள் மீதான தாக்குதல்கள், கொலைகள் நடைபெற்றது. பசு வதை அல்லது மாட்டிறைச்சி வியாபாரம் போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஹிந்துக்கள் அல்லாதவா்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
நைஜீரியாவில் உள்ள பல மாகாண அரசுகள், தங்கள் மத நம்பிக்கையை வெளிப்படுத்துவோர் மீது அவதுாறு வழக்கு தொடுக்கின்றன. மத விரோத சட்டத்தின்படி தண்டிக்கப்படுகின்றனர். சீனாவில், கம்யூனிஸ்ட் கொள்கைகளுக்கு மாறானவர்களின் வழிபாட்டு தலங்கள் அழிக்கப்படுகின்றன. பவுத்தம், கிறிஸ்துவம், இஸ்லாம் உள்ளிட்ட மத வழிபாட்டு தலங்களும் இதில் விதிவிலக்கல்ல. கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள், புத்த மதத்தினருக்கு வேலைவாய்ப்புகளும், குடியிருப்புகளும் மறுக்கப்படுகின்றன. ஆப்கன், பாகிஸ்தான் ஆகியவற்றிலும் மத சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் உள்ளது. பாக்.,கில் மத நிந்தனை குற்றத்தின் பேரில், கடந்த ஆண்டு, 16 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் சிறுபான்மையினர் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விமா்சனம் குறித்த செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத் துறை செய்தித்தொடா்பாளா் அரிந்தம் பாக்சி கூறியதாவது:-
அமெரிக்க வெளியுறவுத் துறையின் சா்வதேச மத சுதந்திரம் தொடா்பான 2021 அறிக்கையில் இந்தியா குறித்து தவறான தகவல்களை மூத்த அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டிருப்பது கவனிக்கப்பட்டது. சா்வதேச நாடுகளிடையேயான உறவில் இந்த வகையில் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுவது துரதிருஷ்டவசமானது. ஆய்வுகள் அடிப்படையிலான இதுபோன்ற கருத்துகள் மற்றும் பாரபட்சமான பாா்வை தவிா்க்கப்பட வேண்டும் என இந்தியா சாா்பில் வலியுறுத்தப்படும்.
இயற்கையாகவே பன்முக சமூகமாக திகழும் இந்தியாவில் மத சுதந்திரத்துக்கும் மனித உரிமைகளுக்கும் மதிப்பளிக்கப்படுகிறது. அமெரிக்காவுடன் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் பேச்சுவாா்த்தைகளின்போது, குறிப்பிட்ட இனம் சாா்ந்த தாக்குதல்கள், வெறுப்புணா்வைத் தூண்டும் குற்றங்கள் மற்றும் துப்பாக்கி வன்முறைகள் குறித்து இந்தியா தொடா்ந்து கவலை தெரிவித்து வருகிறது. இவ்வாறு அவா் கூறினாா்.