கடலுார் அருகே, கெடிலம் ஆற்றில் மணல் எடுத்ததால் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் உட்பட 7 பேர் பரிதாபமாக இறந்தனர்.
கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த கீழ் அருங்குணம் குச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் சங்கர் மகள் சங்கவி, 18; குணாளன் மனைவி பிரியா,19; அமர்நாத் மகள் மோனிஷா; 17; பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியுள்ளார். மோகன் மகள் நவநீதா, 20; முத்துராமன் மகள் சுமிதா,15; அயன்குறிஞ்சிப்பாடி ராஜகுரு மகள்கள் பிரியதர்ஷினி,15; காவியா என்கிற திவ்யதர்ஷினி,10; பிரியதர்ஷினி 9ம் வகுப்பும், காவியா 5ம் வகுப்பும் படித்தனர்.
சங்கவி உள்ளிட்ட 7 பேரும் நேற்று பகல் 12:30 மணிக்கு, கீழ் அருங்குணம் கெடிலம் ஆற்றில் 15 அடி ஆழத்துக்கு மேல் தேங்கி நிற்கும் தண்ணீரில் குளிக்கச் சென்றனர். ஊருக்கு ஒதுக்குப்புறமாக இந்த இடம் இருந்ததால் இவர்கள் குளிக்க சென்றதை யாரும் கவனிக்கவில்லை. இவர்களில் சிறுமி ஒருவர் ஆழம் தெரியாமல் ஆற்றில் இறங்கி குளித்தபோது நீரில் மூழ்கி உயிருக்கு போராடினார். இவரின் அலறல் சத்தம் கேட்டு திடுக்கிட்ட மற்ற 6 பேரும் ஒருவர் பின் ஒருவராக தண்ணீரில் இறங்கி காப்பாற்ற முயன்றனர். இதில் 7 பேரும் தண்ணீரில் மூழ்கினர். இதை பார்த்த ஆடு மேய்க்கும் சிறுவன், ஊரில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்தான். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிராம மக்கள், நீரில் மூழ்கிய 7 பேரையும் மீட்டு, 108 ஆம்புலன்சில் கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 7 பேரும் பரிதாபமாக இறந்தனர். தகவலறிந்து மருத்துவமனைக்கு திரண்டு வந்த கிராம மக்கள் கதறி அழுதது காண்போரை கலங்க செய்தது.
இதற்கிடையில் ஏழு பேர் இறந்த இடத்தின் அருகே சிறுவன் ஒருவனின் உடைகள் கிடந்ததால் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலைய அலுவலர் சிவா தலைமையில் வீரர்கள், ஆற்றில் நீண்ட நேரம் தேடியும் வேறு ஏதும் உடல்கள் கிடைக்கவில்லை. இறந்தவர்களின் குடும்பத்தினர் மருத்துவமனையில் திரண்டனர். டி.எஸ்.பி., சபியுல்லா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இச்சம்பவம் குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இன்ஸ்பெக்டர் அசோகன், சப் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார் கீழ் அருங்குணம் குச்சிப்பாளையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரே ஊரை சேர்ந்த 5 பேர் இறந்ததால் கீழ் அருங்குணம் குச்சிபாளையம் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இறந்த ஏழு பேரும் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிரியதர்ஷினி, 15; காவியா என்கிற திவ்யதர்ஷினி,10, ஆகிய இருவரும் சகோதரிகள். இவர்கள் கீழ் அருங்குணத்தில் நடந்த உறவினர் திருமணத்திற்காக வந்திருந்தனர். திருமணத்திற்காக வந்த இடத்தில் உறவினர்களுடன் ஆற்றுக்கு சென்றபோது, நீரில் மூழ்கி இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்த பிரியாவிற்கு திருமணமாகி ஒரு மாதமே ஆகிறது. இவரது திருமண வாழ்க்கை ஒரே மாதத்தில் முடிந்ததால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்திருந்தனர்.
கீழ் அருங்குணம் குச்சிபாளையத்தில் கெடிலம் ஆற்றின் நடுவே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இப்பணியின் போது, கரையை பலப்படுத்த இதே ஆற்றில் இருந்தே மணல் எடுத்து கரை கட்டினர். வீடு கட்டவும் மணல் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் தடுப்பணையை தாண்டி 500 மீட்டர் துாரத்தில் குட்டை போல் கரையை ஒட்டி, 15 அடி ஆழத்துக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. பள்ளம் இருப்பது தெரியாமலேயே ஆற்றில் மூழ்கி 7 பேரும் இறந்து விட்டதாக குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர்.
கெடிலம் மற்றும் பெண்ணையாற்றில் பல இடங்களில் மணல் எடுத்ததால் ஏற்பட்ட பள்ளங்கள் பல அடி ஆழத்துக்கு பெரிய பள்ளமாக உள்ளன. இதில், தண்ணீர் தேங்கி நிற்கிறது. கடுமையான வெயில் காரணமாக ஆற்றில் குளிக்க செல்லும் சிறுவர்கள், பள்ளம் இருப்பது தெரியாமல் நீரில் மூழ்கி இறக்கும் சம்பவங்கள் நடக்கிறது. பள்ளம் ஏற்பட்டுள்ள இடங்களை மூடினால் மட்டுமே இதுபோன்ற விபத்துகளை தடுக்க முடியும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர்கள் பன்னீர்செல்வம், கணேசன், கலெக்டர் பாலசுப்ரமணியம் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்தனர். நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்து, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண உதவி வழங்கினர். பின், அமைச்சர் பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறுகையில், ‘ஆற்றில் மூழ்கி 7 பேர் இறந்துள்ளனர். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும்’ என்றார்.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சம்பத், இறந்தவர்களின் குடும்பத்திற்கு மருத்துவமனையில் ஆறுதல் கூறி இறுதி சடங்கிற்கு நிவாரண தொகை வழங்கினார். மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் குமார், ஒன்றிய செயலாளர் காசிநாதன் உடனிருந்தனர்.
விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., பாண்டியன், கடலுார் அரசு மருத்துவமனைக்கு வந்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். இறந்த 7 பேரின் உடல்கள் கடலுார் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு இலவச அமரர் ஊர்தி மூலம் உடல்கள் போலீஸ் பாதுகாப்புடன் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவியும் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு்ள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாது:-
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கீழ் அருங்குணம் கிராமத்தில் உள்ள கெடிலம் ஆற்றங்கரையில் சங்கவி (வயது 18), ஹரிப்பிரியா (19), மோனிஷா (16), நவநீதா (20), சுமதா (18), காவியா என்கிற திவ்யதர்ஷினி (10) மற்றும் பிரியதர்ஷினி (15) ஆகிய 7 பேர் குளிக்க சென்றுள்ளனர். குளிக்கும் இடத்தில் அதிக அளவில் பள்ளம் இருந்ததால், அந்தப் பள்ளப் பகுதியில் உள்ள ஆற்று மணலில் சிக்கி எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோரில் 5 பேர் குச்சிப்பாளையம் கிராமத்தையும், இருவர் அயன் குறிஞ்சிப்பாடி கிராமத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த துயர சம்பவத்தை கேள்வியுற்று, மிகவும் வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தாருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.