சென்னையில் காற்று மாசை கட்டுப்படுத்த பொது போக்குவரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க, வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பசுமை தாயகம் சார்பில் ‘சென்னை தூய காற்று செயல் திட்டம்’ வரைவு அறிக்கை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கையை வெளியிட்டார். பின்னர் அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பசுமை தாயகம் சார்பில் அடுத்த தலைமுறையினர் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதற்காக, அரசியலை கடந்து, கடந்த 30 ஆண்டுகளாக நீர், காற்று மாசு அடைதல், காவிரி, காலநிலை மாற்றம், பாலாறு, வைகை, தாமிரபரணி ஆறுகள் மேம்பாடு, அனல் மின்நிலையங்களால் ஏற்படும் மாசு, கழிவுகளை வெளியேற்றும் தொழிற்சாலைகள் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து தீவிர பிரசாரம் செய்ததுடன் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு உள்ளோம். காலநிலை மாற்றத்திற்கு காற்று மாசும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. காற்று மாசு காரணமாக உலகளவில் ஆண்டுக்கு 70 லட்சம் பேரும், இந்தியாவில் 17 லட்சம் பேரும், சென்னையில் 11 ஆயிரம் பேரும் குறிப்பாக சென்னையில் தினசரி 30 பேர் வீதம் இறக்கின்றனர். இந்திய பொருளாதாரத்தில் காற்று மாசுபாட்டால் ஆண்டுக்கு ரூ.7 லட்சம் கோடி இழப்பு ஏற்படுகிறது.
சென்னையில் வசிப்பவர்களின் ஆயுட்காலத்தையும் மேலும் 4 ஆண்டுகள் நீட்டிக்க முடியும். சென்னையில் தற்போது இயக்கப்படும் 3 ஆயிரத்து 500 அரசு பஸ்களின் எண்ணிக்கையை 8 ஆயிரமாக உயர்த்துவதுடன், அனைவருக்கும் இலவச பயணத்தை அளிப்பதன் மூலம் பொதுபோக்குவரத்து சதவீதம் அதிகரித்து காற்று மாசு குறையும். சென்னையில் இயங்கும் 1 லட்சம் ஆட்டோக்களில் பெட்ரோல், டீசலை தவிர்த்துவிட்டு எரிவாயு மற்றும் மின்சாரத்தில் இயங்கும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும். இதற்கான செலவை அரசு மானியத்துடன் ஈடுகட்ட வேண்டும். சென்னையில் காற்று மாசை கட்டுப்படுத்த பொதுப்போக்குவரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனிகவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.