குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி அரியணை ஏறும்: அரவிந்த் கெஜ்ரிவால்

குஜராத்தில் ஆளும் பாஜக அரசை வீழ்த்தி ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக டெல்லி முதல்வரும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெர்ஜிவால் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. குஜராத் மாநிலத்தில் 182 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என அக்கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா அறிவித்துள்ளார். குஜராத்தில் பாஜகவின் கோட்டையாக இருந்த சூரத் மாநகராட்சியை உள்ளாட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியது. பஞ்சாப்பில் காங்கிரஸ் உட்கட்சி பூசலால் ஆட்சியை பறிகொடுத்தது. அதேபோல குஜராத் காங்கிரஸும் உட்கட்சி பூசலில் மோசமான நிலையில் உள்ளது. அண்மையில் காங்கிரஸின் ஹர்திக் பட்டேல், பாஜகவில் இணைந்திருந்தார். குஜராத்தில் காங்கிரஸ் இடத்துக்கு ஆம் ஆத்மி கட்சி முன்னேறிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் மெஹ்சானா பேரணியில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்று பேசியதாவது:

குஜராத் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். பல தொகுதிகளில் மாநிலம் முழுவதும் எமது ஆம் ஆத்மி கட்சியினர் மக்களுடன் உரையாடினர். குஜராத் மாநில மக்களின் இப்போதைய தேவை என்பது அரசியல் மாற்றம்தான். மூவர்ணம் என்பது நமது கொடி. மூவர்ணம் என்பது நமது பெருமிதம். மூவர்ணம் என்பது நமது வாழ்க்கை. மூவர்ண பேரணியில் அனைத்து குஜரத் மக்களும் பங்கேற்க வேண்டும்.

குஜராத்தில் ஆளும் பாஜக அமைச்சர்கள் எங்களை திருடர்கள்; கொள்ளையர்கள் என்கின்றனர்; ஆனால் நாங்கள்தான் மருத்துவமனைகளையும் கல்வி நிறுவனங்களையும் கட்டிக் கொடுத்திருக்கிறோம் என்பதை மறந்துவிடுகின்றனர். நாட்டின் பல மாநிலங்களில் பாஜகவுக்கு மாற்றாக ஆம் ஆத்மி கட்சியே உருவாகி வருகிறது. ஆம் ஆத்மி கட்சிதான் மக்களுக்கு இலவச மின்சாரம், குடிநீர் வழங்கி இருக்கிறது. குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைக் கைப்பற்றும். இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.