இந்தியா மன்னிப்பு கேட்க தேவையில்லை: கேரள கவர்னர்

முஸ்லிம் மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பா.ஜ., நிர்வாகிகள் பேசிய விவகாரத்தில், கத்தார் கூறியபடி, இந்தியா பொது மன்னிப்பு கேட்க தேவையில்லை என கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் கூறியுள்ளார்.

இது தொடர்பாக டெல்லியில் நிருபர்களிடம் கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் கூறியதாவது:-

கடந்த காலங்களில் காஷ்மீர் விவகாரத்தில், பல நாடுகள் இந்தியாவிற்கு எதிராக பேசியுள்ளன. தங்களது கருத்தை தெரிவிக்க மக்களுக்கு உரிமை உள்ளது. அது எப்படி பிரச்னையாகும்? பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது முக்கியம் அல்ல. மன்னிப்பு கேட்க தேவையில்லை. சிறிய எதிர்வினைகள் குறித்து இந்தியா கவலைப்பட தேவையில்லை. தனது பாரம்பரியத்தை பாதுகாப்பதில் இந்தியா கவனமாக இருக்க வேண்டும்.

அனைத்து மரபுகளுக்கும் மரியாதை மற்றும் ஏற்றுக்கொள்வது நமது பாரம்பரியத்தில் உள்ளது. உண்மையில், அனைத்து மரபுகளையும் ஏற்று கொள்கிறோம். மரியாதை கொடுக்கிறோம் என்பது உண்மை. யாரையும் மற்றவர்களாக கருதுவது இந்தியாவின் கலாசாரம் இல்லை. அனைவரையும் உள்ளடக்கிய நமது கலாசாரத்தை பலப்படுத்த வேண்டும் என்ற நமது பிரதமர் மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் ஆகியோரின் கருத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். யாரும் விடுபடக்கூடாது. அது தான் நமது கலாசார பாரம்பரியம். அதனை நாம் பலப்படுத்த வேண்டும். டிவியில் அனல் பறக்கும் விவாதத்தில் நுபுர் ஷர்மாவும் நவீன் குமார் ஜிண்டாலும் உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ளனர். அதற்கு முக்கியத்துவம் அளிக்க தேவையில்லை. இவ்வாறு ஆரிப் முகமது கான் கூறியுள்ளார்.