உத்தரபிரதேசத்தில் உள்ள பா.ஜ., அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த புதுக்கோட்டையை சேர்ந்த நபரை அம்மாநில போலீசார் கைது செய்து, அழைத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியை சேர்ந்தவர் ராஜாமுகமது(30). இவர், உ.பி., போலீஸ் உயரதிகாரிகள் மொபைல் நம்பரை எடுத்து அங்குள்ள பா.ஜ., அலுவலகத்திற்கு நான் குண்டு வைக்கப்போவதாக வாட்ஸ் ஆப் நம்பருக்கு தகவல் அனுப்பியுள்ளார். இதனையடுத்து, உபி மாநில போலீசார் புதுக்கோட்டைக்கு வந்து ராஜாமுகமதுவை கைது செய்து திருக்கோகரணம் போலீஸ் ஸ்டேசனில் வைத்து விசாரணை செய்ததில், தன்னுடைய பெயர் உலகம் முழுவதும் பிரபலமாக வேண்டும் என்பதற்காக தான் அவ்வாறு செய்ததாக அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவருக்கு ஏதாவது குற்றப்பின்னணி உள்ளதா அல்லது அவர் வேறு எந்த இயக்கத்துடனும் தொடர்பு வைத்துள்ளரா என்பது குறித்து உத்தரபிரதேச போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும், தொடர் விசாரணைக்காக, ராஜாமுகமதுவை உ.பி.,க்கு அழைத்து செல்வதற்காக, புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக, அழைத்துச்செல்லப்பட்டு அங்கு பரிசோதனை முடிந்த பின்னர், புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ராஜாமுகமதுவை உ.பி.,க்கு அழைத்துச்சென்றனர். இச்சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.