காவிரி மேலாண்மை ஆணையம் மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கக் கூடாது என்று ஆணையிடக் கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தெரிவித்துள்ளார்.
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
முதல்வர் ஸ்டாலின் 2021 ஜூன் 17ல் பிரதமரை சந்தித்தார். அப்போது காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தைக் கைவிட கர்நாடக அரசுக்கு அறிவுறுத்த கேட்டுக் கொண்டார். நான் 2021 ஜூலை 6ல் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து மேகதாது திட்டத்திற்கு அனுமதி தரக் கூடாது என வலியுறுத்தினேன். முதல்வர் தலைமையில் 2021 ஜூலை 12ல் நடந்த அனைத்து சட்டசபை கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் ‘கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட அனுமதிக்கக் கூடாது’ என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தை மத்திய அமைச்சரிடம் அளித்தபோது ‘தமிழகத்தின் இசைவின்றி எந்த அனுமதியும் அளிக்கப்படாது’ என அவர் உறுதி அளித்தார்.
கர்நாடக அரசு நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. இதை எதிர்த்து தமிழக சட்டசபையில் மார்ச் 21ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. இந்த சூழலில் ஜுன் 17ம் தேதி நடக்க உள்ள ஆணையத்தின் 16வது கூட்டத்தில் ‘மேகதாது அணை திட்டம் குறித்த பொருளை விவாதிக்க ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது’ என மே 25ல் வந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு அனுப்பிய கடிதத்தில் ‘ஆணையத்தின் கருத்து உச்சநீதிமன்றம் 2018 மே 18ல் அளித்த ஆணைக்கும், மத்திய அரசு 2018 ஜூன் 1ல் காவிரி ஆணைய செயல்கள் மற்றும் அதிகார வரம்புகள் குறித்த அறிவிப்புக்கும் முரண்பாடாக உள்ளது. இப்பொருளை விவாதப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆணைய கூட்டத்தில் ‘மேகதாது குறித்த பொருள் ஆணையத்தின் எல்லை வரம்புக்கு அப்பாற்பட்டு உள்ளதால் அது குறித்து விவாதிக்கக் கூடாது’ என்ற தமிழக அரசின் எதிர்ப்பை தமிழக உறுப்பினர்கள் உறுதியுடன் தெரிவிப்பர். காவிரி மேலாண்மை ஆணையம் அதன் வரம்பை மீறி மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கக் கூடாது என்று ஆணையிட வேண்டி உச்சநீதிமன்றத்தில் நேற்று தமிழக அரசு சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு தொடர்ந்து காவிரி பாசன விவசாயிகள் மற்றும் தமிழக மக்களின் நலன்களையும் உரிமையையும் காக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து உறுதியுடன் எடுக்கும். இவ்வாறு துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு தரப்பில் வழக்குரைஞர் டி.குமணன் நேற்று உச்சநீதிமன்றத்தில் புதிதாக ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
மேகதாது அணை குறித்த கர்நாடக அரசால் முன்மொழியப்பட்ட திட்டத்தை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (சிடபிள்யுஎம்ஏ) ஆலோசித்து வருகிறது. இது காவிரி நீர் நடுவர் தீர்ப்பாயம் மற்றும் அதன் தொடர்ச்சியாக உச்சநீதின்றம் 16.02.2018-இல் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரானதாகும். கர்நாடகத்தால் முன்மொழியப்பட்ட மேகதாது நீர்த்தேக்கத் திட்டமானது, காவிரி நீரை நம்பி வாழும் தமிழக விவசாயிகளின் நலனுக்கு கேடு விளைவிக்கும், வாழ்வாதாரம் பாதிக்கச் செய்துவிடும். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே தமிழகம் 30.11.2018-இல் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த அணைத் திட்டத்தால் தமிழகத்துக்கு நீர்வரத்து பாதிக்கப்படும். மேலும், சட்டம் 1956-இன் பிரிவு 6ஏ-இன் கீழ் “ஸ்கீம்’ மூலம் வழங்கப்படாததால் இந்தத் திட்டம் குறித்து ஆய்வு செய்யவோ அல்லது விவாதிக்கவோ சிடபிள்யுஎம்ஏ-க்கு அதிகாரம் இல்லை. இந்த நிலையில், தமிழக அரசுக்கு சிடபிள்யுஎம்ஏ இடமிருந்து 25.5.2022-ஆம் தேதி வரப்பெற்ற கடிதத்தில், இந்த அமைப்பின் 16-ஆவது கூட்டம் 17.6.2022-இல் நடக்க உள்ளதாகவும், அந்தக் கூட்ட பொருள் பட்டியலில் மேகதாது திட்டத்தின் டிபிஆர் குறித்து விவாதிக்கப்பட்ட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழகம் தரப்பில் ஆட்சேபம் தெரிவித்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் நீதிமன்றத்தின் நிலுவையில் இருப்பதால், இதுகுறித்து விவாதிக்கப்பட முடியாது. ஆகவே, இதுகுறித்து ஆலோசிக்க சிடபிள்யுஎம்ஏ-வுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.