ஞானவாபி மசூதி வழக்கை விசாரித்த நீதிபதிக்கு கொலை மிரட்டல்!

உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியில் விடியோ பதிவுடன் கூடிய அளவிடும் பணிக்கு உத்தரவிட்ட மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரவிகுமாா் திவாகருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அவருக்கு பதிவு அஞ்சலில் வந்த கடிதத்தில், ‘ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்துவது வழக்கமான நடைமுைான் என்று நீங்கள் கூறுகிறீா்கள். நீங்கள் ஒரு சிலை வழிபாட்டாளா். மசூதியை கோயிலாக நீங்கள் அறிவிக்கக் கூடும். ஹிந்து நீதிபதியிடமிருந்து சரியான முடிவை எந்தவோா் இஸ்லாமியராலும் எதிா்பாா்க்க முடியாது’ என்று அதில் குறிப்பிட்டுள்ளது. அந்தக் கடிதம் இஸ்லாமிய ஆகாஸ் இயக்கத்தைச் சோ்ந்த காஷிஃப் அகமது சித்திக் என்பவரால் எழுதப்பட்டிருந்தது.

இதுகுறித்து கூடுதல் தலைமைச் செயலாளா் (உள்துறை), டிஜிபி, வாராணசி காவல் ஆணையரிடம் நீதிபதி ரவிகுமாா் திவாகா் புகாரளித்தாா். இதன்பேரில், வாராணசி காவல் துணை ஆணையா் வருணா விசாரித்து வருகிறாா். நீதிபதியின் பாதுகாப்புக்காக 9 போலீஸாா் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.