விமான பயணிகளுக்கு இனிமே முகக்கவசம் கட்டாயம்!

முகக்கவசம் அணியவில்லை என்றால் விமானத்தில் அனுமதிக்க வேண்டாம் என்று விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஹரி ஷங்கர், சமீபத்தில் விமான பயணம் மேற்கொண்ட போது விமானத்தில் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்ற புகார் எழுப்பினார். இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விபின் சாங்கி, நீதிபதி சச்சின் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், விமானத்தில் முகக்கவசம் அணியாதவர்கள், “நோ பிளை லிஸ்ட்” என அழைக்கப்படும் விமான பயணம் மேற்கொள்வதற்கான தடை விதிக்கப்பட்ட நபர் பட்டியலில் சேர்க்க உத்தரவிட்டும், முகக்கவசம் அணிய மறுத்தால் அவர்களை விமானத்தில் ஏற்ற மறுக்கலாம் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

டெல்லி உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வெளியான சில மணி நேரங்களில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் விமானத்திலும், விமான நிலையங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது. ஒரு பயணி விமானத்தில் முகக்கவசம் அணிய மறுத்தால் விமானம் புறப்படுவதற்கு முன்பே அந்த பயணியை விமானத்தில் இருந்து இறக்கி விடலாம் அல்லது விமானம் புறப்பட்ட பின்னர் பயணம் செய்யும் போது குறிப்பிட்ட பயணி முகக்கவசம் அணிய மறுத்தால் விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்ட நபர்களின் பட்டியலில் அவர்களின் பெயரையும் சேர்க்கலாம். மேலும், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பயணிகள் முகக்கவசம் அணிந்து இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அப்படி முகக்கவசம் அணியவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுத்து உரிய அதிகாரிகளிடம் பயணியை ஒப்படைக்கலாம். மேலும், விதிகளை மீறும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.