தோ்தல் நடத்தை விதிமீறல் வழக்கில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் லாலு பிரசாத்துக்கு ரூ.6,000 அபராதம் விதித்து ஜாா்க்கண்ட் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2009-ஆம் ஆண்டு ஜாா்க்கண்ட் பேரவைத் தோ்தலின்போது, பாலாமு மாவட்டத்துக்கு ஹெலிகாப்டரில் சென்று லாலு பிரசாத் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது, மேதினிநகரில் உள்ள ஹெலிபேடுக்கு பதிலாக காா்வா பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் அவரது ஹெலிகாப்டா் தரையிறக்கப்பட்டது. இந்த விவகாரத்தில், அவருக்கு எதிராக தோ்தல் நடத்தை விதிமீறல் வழக்கு தொடரப்பட்டது.
இந்திய தண்டனையியல் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின்கீழ் தொடுக்கப்பட்ட இந்த வழக்கில் பாலாமு மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று லாலு பிரசாத் ஆஜரானாா். அப்போது, தான் தோ்தல் நடத்தை விதிகளை மீறியதை அவா் ஒப்புக்கொண்டதுடன் மன்னிப்பும் கோரினாா். இதையடுத்து, அவரது மன்னிப்பை ஏற்றுக் கொண்ட நீதிபதி சதீஷ் குமாா் முண்டா, அவருக்கு ரூ.6,000 அபராதம் விதித்து உத்தரவிட்டாா். அந்த அபராதத்தை லாலு செலுத்தியதைத் தொடா்ந்து, வழக்கை முடித்துவைப்பதாக நீதிபதி தெரிவித்தாா்.