பிரதமர் மோடி உடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு!

பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள அவருடைய இல்லத்தில், பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று சந்தித்து பேசினார்.

பாமகவின் தலைவராக பதவியேற்றதிலிருந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து அன்புமணி ராமதாஸ் வாழ்த்துக்களை பெற்று வருகிறார். அந்த வகையில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, பாமகவின் தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், அந்த பொறுப்பில் சிறப்பாக செயல்பட வாழ்த்துவதாகவும் மோடி தெரிவித்தார். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் உடல்நலம் குறித்து அன்புமணியிடம், மோடி விசாரித்தார். மேலும் அவருடைய உடல் நலனை கவனித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தின் நலனுக்காக காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும், அதற்காக சம்பந்தப்பட்ட மாநிலங்களின் முதலமைச்சர்கள் மாநாட்டை பிரதமர் தலைமையில் நடத்தவேண்டும். காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதன் ஒரு கட்டமாக அனைத்து ஆறுகளிலும் தடுப்பணைகளை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமரிடம், அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்தார்.

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கவேண்டும். தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை உடனடியாக அமைக்கவேண்டும். ஆணையத்தில் தமிழ்நாட்டுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளையும் மோடியிடம் அன்புமணி ராமதாஸ் முன்வைத்தார்.

அன்புமணி ராமதாஸ் விடுத்த கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலிப்பதாக மோடி உறுதியளித்தார். மோடி உடனான அன்புமணி ராமதாஸின் சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நடந்தது. பிரதமர் உடனான சந்திப்பு மிகவும் சுமுகமாகவும், மன நிறைவளிக்கும் வகையிலும் இருந்ததாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.