மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள வங்கதேச துணை தூதரக அலுவலகம் அருகே திடீரென்று போலீஸ்காரர் சரமாரியாக சுட்டதில் பெண் பலியானார். மேலும் அவரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் வங்கதேச துணை தூதரக அலுவலகம் உள்ளது. இங்கு கொல்கத்தாவை சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் சவ்தப் லெப்சா காவல் பணியில் ஈடுபட்டு வந்தார். விடுமுறைக்கு பிறகு இன்றும் அவர் பணியில் ஈடுபட்டார். இந்த வேளையில் திடீரென்று அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தன்னைத்தானே சில ரவுண்டுகள் சுட்டார். இதனால் அவர் குண்டு பாய்ந்து சரிந்து விழுந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மேலும் அவர் துப்பாக்கியால் சுட்டபோது தவறிய குண்டு அந்த பகுதியில் நடந்து சென்ற பெண்ணின் உடலில் பாய்ந்தது. இதனால் அந்த பெண்ணும் சரிந்து விழுந்து உயிரிழந்தார். மேலும் இன்னொரு நபரும் காயமடைந்தார். இதுபற்றி அறிந்தவுடன் போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த நபருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இறந்த பெண்ணின் விபரங்கள் உடனடியாக கிடைக்கவில்லை. அதேநேரத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் லெப்சா எதற்காக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், அவர் அந்த பெண்ணை சுட்டு கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டாரா?. இல்லை அவர் தற்கொலை செய்ய துப்பாக்கியால் சுட்டபோது குண்டு அந்த பெண் மீது பாய்ந்து அவர் இறந்தாரா? என்பது பற்றியும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.