குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகளுக்கு மம்தா அழைப்பு!

தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிகிறது. எனவே, புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல், ஜூலை 18ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 21ம் தேதி எண்ணப்பட உள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, வேட்பாளர் தேர்வில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் தீவிரமாக கவனம் செலுத்த தொடங்கி உள்ளன.

இந்நிலையில் மு.க.ஸ்டாலின், அரவிந்த் கெஜ்ரிவால், பினராயி விஜயன், சந்திரசேகர ராவ், உள்ளிட்ட 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். அதில், ஜூன் 15ம் தேதி டெல்லியில் ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். மத்திய அரசின் பல்வேறு அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் குறி வைக்கப்படுகிறார்கள். குடியரசு தலைவர் தேர்தலில் வலுவான பங்களிப்பை அளிக்க வேண்டும். குடியரசு தலைவர் தேர்தலில் ஒருமித்த கருத்து உள்ள அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் நுபுர் சர்மா விவகாரம் முதல் கலவரம் வரை பாஜகதான் காரணம் என மேற்கு வங்க மாநில முதல்வரும் , திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, “நான் இதற்கு முன்னரும் இதனைக் கூறி இருக்கிறேன். கடந்த இரண்டு நாட்களாக வன்முறை காரணமாக ஹவுராவில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறைகளுக்குப் பின்னால் சில அரசியல் கட்சிகள் உள்ளன. அவர்கள் கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கிறார்கள். இதனை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பாஜக செய்யும் பாவங்களால் மக்கள் பாதிக்கப்படுவார்கள்” என கடுமையாக விமர்சித்துள்ளார்.