தமிழகத்தில் திட்டமிட்டபடி 13ம் தேதி பள்ளிகள் திறப்பு: அன்பில் மகேஷ்

தமிழகத்தில் நாளை மறுநாள் 13ம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 13ஆம் தேதி திறக்கப்படவிருக்கும் நிலையில், தமிழக பள்ளிக்கல்வித் துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வெளியிட்டிருக்கிறது. அதில், அனைத்துப் பள்ளிகளையும் தூய்மைப் பணிகளை முடித்து மாணவர்களை வரவேற்க தயார்படுத்த வேண்டும், பள்ளிகளில் மின் இணைப்புகளில் மின் கசிவு, மின் கோளாறுகள் ஏதேனும் இருக்கிறதா என்று என்று சோதனை நடத்தி, அவ்வாறு இருந்தால் சீர் செய்ய வேண்டும், சத்துணவுக் கூடங்களை சுத்தப்படுத்தி, சுகாதாரமாண உணவு மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறந்ததும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பாட நூல்கள் பெறப்பட்டு, மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், பள்ளிப் பேருந்துகள் அனைத்தும் முறையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தகுதிச் சான்றிதழ் பெற்ற பிறகே மாணவ, மாணவிகளை அழைத்து வரப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தரப்பில் பள்ளி நிர்வாகங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கும்பகோணத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், கோடை விடுமுறை முடிந்து வரும் 13ம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும். பள்ளிகளில் அனைத்து அடிப்படை வசதிகளும் சரியாக இருக்கிறதா என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும், தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது. அவ்வாறு கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து புகார் வந்தால், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரித்துள்ளார்.