கொரோனா தடுப்பூசிதான் நம்ம ஆயுதம்: முதல்வர் ஸ்டாலின்!

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து கொரோனாவுக்கான கட்டுப்பாடுகளை அதிகப்படுத்துவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனாபரவலை தடுக்கஎடுக்கப்படவேண்டிய தொடர் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சுகாதாரத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள் பங்கேற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனோ தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் இதுவரை கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் குறைவாகவே காணப்பட்டாலும், இதனை மேலும் உயராமல் கட்டுப்படுத்த வேண்டும். கொரோனா சிகிச்சை வசதிகளை தயார் நிலையில் வைக்கவேண்டும். கொரோனா கட்டுப்பாட்டுப் பணிகளை சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறை, நகராட்சி நிர்வாகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை போன்ற துறைகளை ஈடுபடுத்தி உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

பணி செய்யும் இடங்கள், திருவிழாக்கள், திருமணங்கள், கூட்டங்கள், நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் மக்களிடையே ஒரு சிலர் தொற்றால் பாதிக்கப்படும்போது, அனைவரையும் பரிசோதனை செய்து, தொடர் கண்காணிப்பு செய்து, உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், தனிமனித இடைவெளியைக் கடைபிடித்தல் ஆகியவற்றை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

போதிய பரிசோதனைகள், தொடர் கண்காணிப்பு, சிகிச்சை மற்றும் தடுப்பூசி ஆகியவற்றை முறையாக பின்பற்றிட பொதுமக்களிடையே தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தடுப்பூசி ஒன்றே கொரோனாவை வெல்லும் ஆயுதம் என்பதால், மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது. இதுவரை 93.82 விழுக்காடு நபர்கள் முதல் தவணை தடுப்பூசியும், 82.94 விழுக்காடு நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசியும் போட்டுக் கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் 43 லட்சம் பேர் முதல் தவணை கொரோனா தடுப்பூசியும், 1.20 கோடி நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசியும், என மொத்தம் 1.63 கோடி பேர் இன்னும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டியுள்ளது. எனவே, தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, தடுப்பூசி போடுவதால் ஏற்படும் நன்மைகளை விளக்கி, அவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நிலையை உருவாக்கிட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.