இந்த நாடு ரிஷிகளாலும் முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியாலும் உருவாக்கப்பட்டது என தமிழக கவர்னர் ரவி கூறியுள்ளார்.
சபரிமலை ஐயப்பா சேவா சமாஜம் சார்பில் வானகரத்தில் ஹரிவராசனம் பாடலின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கவர்னர் ரவி பேசியதாவது:-
மனிதர்களுக்கு மட்டுமின்றி, உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் வழிபாடு என்பது அவசியம். புத்த மதத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களும் தத்துவங்களும் சனாதன தர்மத்தில் இருந்து வந்தவை. சனாதன தர்மம் தான் நமதுநாட்டை உருவாக்கியது. நமது நாட்டின் எண்ணம், செயல் போன்றவற்றில் சனாதானம் உள்ளது.
இந்திய அரசியல் அமைப்பு தான் அரசிற்கு ஆதாரமாகவும் ஆன்மாவாகவும் உள்ளது. நமது நாடு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தோன்றியது. அப்போது நமது அரசியல் அமைப்பும் எழுதப்பட்டுவிட்டது. மற்ற நாடுகளைப் போல, நமது நாடு ராணுவ வீரர்கள், அரசர்கள் மூலம் உருவாகவில்லை. இந்த நாடு ரிஷிகளாலும் முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியாலும் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் ராணுவம், பொருளாதாரத்தில் வளர்ச்சியைப்போல ஆன்மிகத்தில் வளர்ச்சி அவசியம். அதற்கு சனாதன தர்மம் வழிமுறையாக இருக்கும்.
இந்தியா வல்லரசு நாடாக வளர்ந்துவரும் நிலையில் அதன் தலைமைத்துவம் ஆன்மிகத்தின் மீது நம்பிக்கை கொண்டதாகவும் மக்களின் மனநிலையை புரிந்து கொண்டதாகவும் இருக்கவேண்டும். தற்போது வலிமையான தலைமை இந்தியாவை ஆட்சிசெய்து கொண்டிருக்கிறது. தொடர்ச்சியான ஆன்மிகத்தில் வளர்ச்சி இந்த தேசத்தின் வளர்ச்சி ஆகும். இவ்வாறு அவர் பேசினார்.