அ.தி.மு.கவை யாராலும் அழிக்க முடியாது: ஜெயக்குமார்

எம்.ஜி.ஆர் ஆரம்பித்த இந்த அ.தி.மு.கவை யாராலும் அழிக்க முடியாது என்று, முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

நாட்டில் எத்தனையோ கட்சிகள் இருந்தாலும் கழகம் என்ன செய்கிறது என்ற அசைவுகளைத்தான் எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். கட்சியில் இல்லாத ஒருவர் ( சசிகலா) குறித்து ஏன் பேசவேண்டும் என்று இணை ஒருங்கிணைப்பாளரே சொல்லியுள்ளார். அவர் கட்சியில் இல்லை. அவர் குறித்துப் பேச வேண்டிய அவசியம் கிடையவே கிடையாது.

ஆன்லைன் ரம்மி விளையாட்டை உடனடியாக தடை செய்து முற்றிலும் ஒழிப்பதற்கு மாநில அரசே அதிகாரம் படைத்தது. இப்படி இருக்கும்போது ஏன் குழு போட்டுச் சுற்றவிடுகிறீர்கள். மக்கள் நலனுக்கான போராட்டங்களை அ.தி.மு.க நடத்தி வருகிறது. விலைவாசி உயர்வு, சொத்துவரி போராட்டங்கள் நடத்தி உள்ளோம். மின் வாரிய அவல நிலையை கண்டித்து என் தலைமையிலும் போராட்டம் நடந்தது.

காவல்துறை எதிர்க்கட்சிகளைப் பழிவாங்கும் பணியைச் செய்கிறது. பொய் வழக்குப் போடுகிறது. எங்கள் மீது எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் சரி, சிறையில் அடைத்தாலும் சரி, 1972-ல் எம்.ஜி.ஆர் ஆரம்பித்த இந்த அ.தி.மு.கவை யாராலும் அழிக்க முடியாது. இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.