உத்தர பிரதேசத்தின் கான்பூரில் சமீபத்தில் வன்முறையில் ஈடுபட்டவருக்கு தொடர்புடைய வீடு ‘புல்டோசர்’ வாயிலாக இடித்து தள்ளப்பட்டது.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ. அரசு அமைந்துள்ளது. இங்கு வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு சொந்தமான கட்டடங்கள் புல்டோசர் வாயிலாக இடித்து தரைமட்டமாக்கப்படுகின்றன. இந்நிலையில் முஸ்லிம்கள் குறித்து பா.ஜ.வைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் நுாபுர் சர்மா சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர் கட்சியில் இருந்து ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார். நுாபுர் சர்மா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முஸ்லிம் அமைப்புகள் சமீபத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கான்பூரில் நடந்த போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் போலீசார் உட்பட 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
வன்முறையில் ஈடுபட்டதாக முக்கிய குற்றவாளியான ஜாபர் ஹயாத் ஹாஸ்மி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹாஸ்மிக்கு மிகவும் நெருக்கமான முகமது இஸ்தியாக் என்பவருக்கு சொந்தமாக ஸ்வரூப் நகரில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் நேற்று புல்டோசர் வாயிலாக இடித்து தள்ளப்பட்டது. டைலராக வேலை பார்த்து வந்த இஸ்தியாக் கடந்த சில ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும் இந்த நான்கு மாடிக் கட்டடத்தை கட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த வீட்டில் ஹாஸ்மியும் முதலீடு செய்துள்ளதாகவும் கான்பூர் வளர்ச்சி ஆணைய அதிகாரிகள் கூறியுள்ளனர். சட்டவிரோதமான முறையில் கட்டியதால் இந்தக் கட்டடம் இடித்து தள்ளப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.