வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்கும் மசோதா மேற்கு வங்க சட்டசபையில் நிறைவேற்றம்!

மேற்கு வங்க மாநிலத்தில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களில் வேந்தர் பதவிகளில் இருந்து ஆளுநரை நீக்கிவிட்டு வேந்தர்களாக முதல்வரே பதவி வகிக்க வகை செய்யும் மசோதா இன்று சட்டசபையில் அதிரடியாக நிறைவேற்றப்பட்டது.

மத்தியில் ஆளும் பாஜக சார்பு ஆளுநர்கள், எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆட்சி நிர்வாகங்களில் குறுக்கீடுகள் செய்வது தொடர் கதையாகிவிட்டது. இதனால் மாநில அரசுகளின் நிர்வாகம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்துத்தவா ஆதரவு கருத்துகளை தொடர்ந்து வெளிப்படுத்தி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இதேபோல் மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தன்கர், அம்மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்கு இடைவிடாமல் நெருக்கடி கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் ஆளுநரின் அதிகாரங்களைப் பறிக்கும் நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்தில், பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்க வகை செய்யும் சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக சட்டசபையில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், கொள்கை முடிவு எடுக்கும் அரசுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் இல்லாதது உயர்கல்வியில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை கலந்தாலோசித்து துணைவேந்தரை நியமிப்பது மரபாக இருந்துவந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளில் துணைவேந்தர் நியமனங்களில் மாநில அரசை மதிக்காமல் செயல்படும் போக்கு தலைதூக்கியுள்ளது. இதனால் பல்கலைக்கழக நிர்வாகங்களில் பல்வேறு குளறுபடிகள் நடக்கின்றன. இது மக்களாட்சித் தத்துவத்துக்கே விரோதமாக உள்ளது என கூறியிருந்தார்.

இதேபாணியில் இன்னும் ஒருபடிமேலே போய் அதிரடி காட்டி உள்ளது மேற்கு வங்க அரசு. நாடு முழுவதும் பல்கலைக் கழகங்களின் வேந்தர்களாக ஆளுநர்கள் உள்ளனர். மாநிலங்கள் தங்களது உரிமைகளை பாதுகாக்கும் வகையில் பல்கலைக் கழக வேந்தர்கள் பதவியை மாநில முதல்வர்களே வகிக்க வேண்டும் என்பது நீண்டகால குரல். இதனை நிறைவேற்றும் வகையில் மேற்கு வங்க சட்டசபையில் இன்று அதிரடி தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதாவது மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்களின் வேந்தர்களாக இனி மாநில முதல்வர்தான் பதவி வகிப்பார் என்பதுதான் தீர்மானம். இத்தீர்மானம் மேற்கு வங்க சட்டசபையில் அதிரடியாக நிறைவேறியது. அதாவது மேற்கு வங்க பல்கலைக் கழகங்களில் இனி வேந்தர் என்ற பதவியில் ஆளுநர் நீடிக்க முடியாது; வேந்தர் என்ற பதவியை வைத்துக் கொண்டு பல்கலைக் கழகங்களில் ஆளுநர் சர்வாதிகாரமாக செயல்படும் போக்கு முடிவுக்கு வர உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தைப் பின்பற்றி பிற மாநிலங்களும் இதேபோல ஆளுநரின் அதிகாரத்தைப் பறிக்கும் தீர்மானத்தைக் கொண்டுவர வாய்ப்புகள் உள்ளன.