அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழகத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி சீர்குலைக்க முயற்சி செய்வதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
சனாதன தர்மத்தின் ஒளியால் உருவாக்கப்பட்டதே இந்தியா என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி மதச்சார்பற்ற கொள்கைக்கு எதிராக கருத்து தெரிவித்திருப்பதாக தி.மு.க, வி.சி.க, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “வேற்றுமையில் ஒற்றுமை என நாட்டைப் பற்றிக் கூறுகிறோம். சனாதன தர்மமும் அதையேதான் கூறுகிறது. நாட்டின் வளர்ச்சியைப் போல ஆன்மிக வளர்ச்சியும் அவசியம். அதுவே இந்தியாவின் வளர்ச்சி” என்று கூறியதோடு நிற்காமல், “சனாதன தர்மத்தினால் தான் இந்தியா ஒளிர்கிறது” என்று வகுப்புவாத, பிற்போக்குத்தனமான கருத்துகளை அப்பட்டமாகக் கூறியிருக்கிறார். இதன்மூலம் கவர்னர் ஆர்.என்.ரவி, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளராக மாறியிருக்கிறார். அவரது உரை அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது.
மதச்சார்பற்ற கொள்கையைக் குழிதோண்டி புதைக்கிற வகையில் சட்டவிரோதமாக ஒரு ஆளுநரே பேசியிருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியது. ஆர்.என்.ரவி தமிழக மக்களுக்கு மட்டும் விரோதி அல்ல. அரசமைப்புச் சட்டத்துக்கும், இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும் விரோதமாகச் செயல்பட்டு, அமைதிப் பூங்காவாக இருக்கிற தமிழகத்தைச் சீர்குலைக்க முயற்சி செய்து வருவதை எவரும் அனுமதிக்க முடியாது. வகுப்புவாத அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்துகிற கருத்துகளை ஆர்.என்.ரவி கூறுவதை இனியும் நிறுத்தவில்லை எனில், அவருக்கு எதிராக கடுமையான போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன். இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.