மத்திய அரசு, சட்டத்தை தவறாக பயன்படுத்துவதால், காங்கிரசின் போராட்டம் தொடரும் என அக்கட்சியின் மூத்த தலைவர் சிதம்பரம் கூறியுள்ளார்.
செய்தி நிறுவனத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மத்திய அரசு சட்டத்தை தவறாக வழிநடத்துவதால், போராட்டம் நடத்துகிறோம். அமலாக்கத்துறையினர் சட்டத்தை மதித்து நடந்தால், எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், அமலாக்கத்துறை சட்டத்தை மதிப்பது கிடையாது. என்ன குற்றம் நடந்தது என நாங்கள் கேட்கிறோம். அதற்கு எந்த பதிலும் இல்லை. எந்த போலீஸ் அமைப்பு வழக்குப்பதிவு செய்துள்ளது? அதற்கு பதில் இல்லை. வழக்குப்பதிவு நகலை கொடுங்கள். இதற்கும் பதில் இல்லை.
ஜனநாயக அமைப்பில், விசாரணை அமைப்பு சட்டத்தை மதிக்காததால், கட்சி போராட்டம் நடத்துகிறது. குற்றங்கள் இல்லாத சூழ்நிலையில், போலீஸ் அமைப்பு வழக்குப்பதிவு செய்யாத நிலையில், வழக்குப்பதிவின் நகலை கொடுக்காததாலும், பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டிய என்ன அவசியம்? இது போன்ற எளிதான கேள்விகளுக்கு எந்த பதிலும் இல்லை. சட்டத்தையும், ஜனநாயகத்தையும் மதிக்காததாலும் நாங்கள் போராட்டம் நடத்துகிறோம்.
கடந்த 4.5 ஆண்டுகளில் எந்த பா.ஜ., தலைவர்கள் மீதாவது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதா? பா.ஜ., ஆளும் ஹரியானா, ம.பி., கர்நாடகா மாநிலங்களில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்ததா? சட்டம், நாடு முழுவதும் பொருந்தினால், எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.
யங் இந்தியா, அசோசியேட்டர் ஜர்னல் லிமிடெட் தொடர்பான பணப்பரிமாற்றங்கள் அனைத்தும் வருமான வரிகணக்கு தாக்கலில் அனைத்தும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சோனியாவும், ராகுலும் இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதனை உச்சநீதிமன்றம் பதிவு செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் ஆவணங்கள் பொது மக்கள் பார்வைக்கு உள்ளது. அதில் அனைத்து உண்மைகளும் உள்ளன. என்ன கேள்வி கேட்க விரும்புகிறீர்கள்? என்ன கேள்விக்கு பதில் தெரிய வேண்டும்? எந்த சந்தேகம் இருந்தாலும் உச்சநீதிமன்ற ஆவணங்களில் படித்து பார்த்து கொள்ளுங்கள். பணமோசடி தடுப்பு சட்ட வழக்கில் திடீரென கண்டுபிடித்தது என்ன?. இவ்வாறு சிதம்பரம் கூறினார்.