உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களிடம் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என தானே நகர கமிஷனர் அலுவலக வலைதளம் முடக்கத்தில் ஈடுபட்ட ஹேக்கர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
டெல்லியை சேர்ந்த முன்னாள் பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா, டி.வி. விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது, ஒருவர் கூறிய விசயத்திற்கு பதிலாக பேசியது பெரிய சர்ச்சையாக வெடித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. கலவரங்களும் மூண்டன. இதுதவிர, முஸ்லிம் தூதருக்கு எதிராக பேசியதற்காக மத்திய கிழக்கு நாடுகளும் கண்டனங்களை வெளியிட்டன. நாட்டில் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றதுடன், அதில் வன்முறைகளும் ஏற்பட்டன. வழக்குகளும் பதிவாகின.
இந்த விவகாரத்தில், மராட்டியத்தின் தானே நகர கமிஷனர் அலுவலக வலைதளம் இன்று ஹேக்கர்களால் முடக்கம் செய்யப்பட்டு உள்ளது. அதன் வலைதள பக்கத்திற்கு சென்றால், ஒன் ஹேட் சைபர் டீம் என்ற பெயரால் வலைதளம் முடக்கம் செய்யப்பட்ட செய்தி ஒன்று வருகிறது. அதில், இந்திய அரசுக்கு வணக்கம். ஒவ்வொருவருக்கும் வணக்கம். இஸ்லாமிய மதத்திற்கு திரும்ப, திரும்ப நீங்கள் பிரச்னைகளை உண்டு பண்ணி கொண்டு இருக்கிறீர்கள். உடனே, உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேளுங்கள். எங்களுடைய இறை தூதர் அவமதிக்கப்படும்போது நாங்கள் அமைதியாக இருக்க முடியாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி தேவையான நடவடிக்கை எடுக்கும்படி தொடர்புடைய அமைப்புகளிடம் தெரிவித்து உள்ளோம். தானே சைபர் குழு சரி செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளது என மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.