நடத்துனர் இல்லா பேருந்துகளை இயக்கும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் போக்குவரத்துக் கழகம் பல ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில், நடத்துனர்களே இல்லாமல் பேருந்துகளை இயக்கும் திட்டம் சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெளிநாடுகள் பலவற்றில் பேருந்துகளில் நடத்துனர்கள் இருக்க மாட்டார்கள். பேருந்தில் ஏறும் பயணிகள் தாங்களே கட்டணம் செலுத்தி டிஜிட்டல் டிக்கெட் பெற்றுக் கொள்ள வேண்டும். அதுபோல, தமிழ்நாட்டில் சோதனை முயற்சியாக நடைபெற்று வரும் இந்த முறையில் பேருந்தில் ஏறும்போதே டிக்கெட் வழங்கப்படும். இந்தத் திட்டத்தை தமிழகம் முழுக்க விரிவுபடுத்த போக்குவரத்து கழகம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் நடத்துனருக்கான சம்பளம் உள்ளிட்ட செலவுகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இது ஓட்டுநருக்கு சுமையாக மாறிவிடும் என போக்குவரத்து ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடத்துனர் இல்லா பேருந்துகளை இயக்கும் திட்டத்தை உடனே கைவிட வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாடு அரசின் விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் இல்லா பேருந்துகளை இயக்க முடிவெடுத்து அதை அமல்படுத்தத் தொடங்கி இருக்கிறது தமிழக அரசு. சாலை விபத்துகள் அதிகமாக நடக்கும் இந்தக் காலகட்டத்தில், கூடுதல் தனி கவனத்தோடு பேருந்துகளை இயக்க வேண்டிய ஓட்டுனர்களையே, கூடுதலாக நடத்துனர் பணியையும் கவனிக்கச் செய்யும் இந்த முயற்சி விபரீதமானது, ஆபத்தானதும் கூட. சோதனை முயற்சியாக நாகப்பட்டினத்தில் இந்தத் திட்டத்தை அமல்படுத்திய முதல் நாளே சிறு விபத்து நடந்ததை எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு இந்தத் திட்டத்தை உடனடியாக தமிழக அரசு நிறுத்த வேண்டும்.
போக்குவரத்துக் கழகங்களை நஷ்டத்திலிருந்து மீட்க எவ்வளவோ வழிகள் உள்ளபோது, மக்களின் உயிரோடு விளையாடும் வகையில் ஓட்டுனர்களுக்கு மன அழுத்தத்தையும் பணிச்சுமையையும் கொடுக்கும் இத்திட்டத்தை உடனடியாக கைவிட்டு, போதிய ஊழியர்களோடு பேருந்துகள் இயங்குவதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.