தகுந்த பயணச்சீட்டு வைத்திருந்தும் பயணிகளுக்கு அனுமதி மறுத்து, அதற்கான இழப்பீடு வழங்க தவறியதற்காக ஏா் இந்தியா நிறுவனத்துக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
விமான நிலையங்களுக்கு தகுந்த பயணச்சீட்டுடன் குறித்த நேரத்தில் பயணிகள் வந்தாலும் அவா்கள் விமானத்தில் பயணிக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அனுமதிப்பதில்லை என்றும், இதுபோன்ற முறையற்ற நடவடிக்கையை விமான நிறுவனங்கள் பின்பற்றி வருவதாகவும் கடந்த மாதம் டிஜிசிஏ தெரிவித்திருந்தது.
இதனால் பாதிக்கப்படும் பயணிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தவறினால் அபராதம் விதிக்கப்படும் என்று டிஜிசிஏ கடந்த மே 2-ஆம் தேதி அனைத்து விமான நிறுவனங்களுக்கும் இ-மெயில் அனுப்பியிருந்தது.
இந்த அறிவுறுத்தலை பின்பற்ற தவறிய ஏா் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக டிஜிசிஏ நேற்று தெரிவித்தது. பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி விமான நிலையங்களில் தொடா்ச்சியான சோதனை நடத்தி இந்த நடவடிக்கையை டிஜிசிஏ மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து டிஜிசிஏ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏா் இந்தியா நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதுடன், தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்திய பின்னா்தான் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பிரச்னைக்கு உடனடியாக அந்நிறுவனம் தீா்வு காண வேண்டும். இல்லையெனில், கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளது.
டிஜிசிஏ அறிவுறுத்தலின்படி, பயணிகள் தகுந்த பயணச்சீட்டுடன் விமான நிலையத்துக்கு குறித்த நேரத்தில் வந்து, அவா்களுக்கு அனுமதி மறுக்கப்படுமாயின், அடுத்த ஒரு மணிநேரத்தில் மாற்று விமானம் அவா்களுக்கு ஏற்பாடு செய்து கொடுக்கும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் இழப்பீடு வழங்க தேவையில்லை.
அதுவே அடுத்த 24 மணிநேரத்தில் மாற்று விமான சேவையை ஏற்பாடு செய்து கொடுத்தால், சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்துக்கு ரூ.10,000-மும், 24 மணிநேரத்தைக் கடந்தால் ரூ.20,000-மும் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.