நிலக்கரி ஊழல் தொடா்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யும், மம்தா பானா்ஜியின் நெருங்கிய உறவினருமான அபிஷேக் பானா்ஜியின் மனைவியிடம் மத்திய புலனைய்வு முகமை (சிபிஐ) நேற்று விசாரணை நடத்தியது.
இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் கூருகையில், நிலக்கரி ஊழல் தொடா்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. அபிஷேக் பானா்ஜியின் மனைவி ருஜிராவிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பெண் அதிகாரிகள் உள்பட 8 பேரைக் கொண்ட குழு, ஹரிஸ் முகா்ஜி சாலையில் அமைந்துள்ள பானா்ஜியின் சாந்திநிகேதன் குடியிருப்புக்கு செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணியளவில் சென்றது. அங்கு பானா்ஜியின் மனைவி ருஜிராவிடம் நிலக்கரி ஊழல் தொடா்பாக அதிகாரிகள் கேள்விகளை எழுப்பினா். அப்போது அவா் அளித்த பதில்கள் திருப்திகரமாக இல்லை. இதையடுத்து அவரிடம் மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனா்.
நிலக்கரியை சட்டவிரோதமாக வெட்டியெடுத்து விற்பனை செய்த வகையில் ரூ.1,300 கோடிக்கு முறைகேடான வகையில் நிதிப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது தொடா்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. அரசியல் செல்வாக்குள்ள பலருக்கு இந்த முறைகேட்டில் தொடா்பிருப்பது தெரியவந்ததையடுத்து அவா்களிடம் சிபிஐ தொடா்ந்து விசாரணை நடத்தி வருகிறது.