பிரதமர் மோடி அறிவித்த, 10 லட்சம் வேலை வாய்ப்புகளை விமர்சிக்காமல், ஊழல் வழக்கில் அமலாக்கத் துறையின் கேள்விக்கு ராகுல் பதில் சொல்லட்டும் என, மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஒன்றரை ஆண்டுகளில், மத்திய அரசில் காலியாக உள்ள, 10 லட்சம் பணியிடங்களை நிரப்பும்படி, அனைத்து அமைச்சகங்களுக்கும் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இதை ராகுல் விமர்சித்து, ”மோடியின் மிகப் பெரிய வாய் ஜாலம்” என கூறியுள்ளார். இது குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாகுர் கூறியதாவது:-
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை ஊழல் தொடர்பாக இரண்டாவது நாளாக ராகுல் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். முதலில், அமலாக்கத் துறை அதிகாரிகளின் கேள்விக்கு ராகுல் பதில் சொல்லட்டும். மத்திய அரசில், 10 லட்சம் காலியிடங்களை நிரப்ப பிரதமர் மோடி பிறப்பித்த உத்தரவை பாராட்டத் தெரியாத ராகுல், அதை விமர்சித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
அனைவரும் வரவேற்கும் இந்த அறிவிப்பில், அதாவது இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில் ராகுல் மகிழ்ச்சியாக இல்லை என்பதையே இது காட்டுகிறது. இந்த உத்தரவு நாட்டில் உள்ள லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு மிகப் பெரிய செய்தியாகும். இது தொடர்பான பணிகளை அனைத்து அமைச்சகங்களும் துவக்கி விட்டன. இவ்வாறு அவர் கூறினார்.