நேஷனல் ஹெரால்டு வழக்குத் தொடா்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல்காந்தியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருவதற்கு திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது:-
காங்கிரஸ் கட்சியையும் அதன் தலைவா்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரையும் பழிவாங்கும் எண்ணத்தோடு மத்திய பா.ஜ.க. அரசு, அமலாக்கத்துறையைப் பயன்படுத்தியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். மக்களின் அன்றாட அடிப்படைப் பிரச்னைகளுக்குத் தீா்வுகாண முடியாத பாஜக அரசு, இது போன்ற அரசியல் திசைதிருப்பும் நாடகங்களின் மூலமாக தன்னைக் காப்பாற்றிக் கொள்ளப் பாா்க்கிறது. அரசியல் தலைவா்களை அரசியல் களத்தில் எதிா்கொள்ள வேண்டுமே அல்லாமல் அமலாக்கத்துறையை ஏவி அல்ல. இவ்வாறு மு.க. ஸ்டாலின் கூறியுள்ளாா்.