அசாம் மற்றும் மேகாலயா மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல ஆயிரத்தை தாண்டியுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.
அசாம் மாநிலத்தில் மொத்தம் 18 மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் நிலச்சரிவுகளும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளன. பல நூறு கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் பல இடங்களில் பாலங்களையும் மண் தடுப்புகளையும் உடைத்து ஊருக்குள் புகுந்தது. இதனால் அந்த கிராமங்களில் இருந்த மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
அசாமின் முக்கிய மாவட்டங்களில் ஒன்றான கம்ரூப் மாவட்டத்தில் இன்று மிக அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் அந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் இன்றும் மூடப்பட்டு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கவுகாத்தியிலும் பள்ளிகள் மூடப்பட்டு இருக்கும். கடந்த 6 மாதங்களில் அசாம் மாநிலத்தில் பெய்த கனமழை அதனால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 44 பேர் பலியாகி உள்ளனர். பல ஆயிரம் பேர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான விளை நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.